அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று தாலுகா அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ராணிப்பேட்டை மாவட்ட மையம் சார்பில் நேற்று பணிகளை புறக்கணித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த்துறை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், சிறப்பு முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்துவதற்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் என்பன உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் எத்திராஜ் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் லட்சுமி நாராயணன் மற்றும் வருவாய்த்துறை சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், ஆற்காடு, நெமிலி, கலவை தாலுகா அலுவலகம் உட்பட மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.