சீர்காழி: டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் நேற்றிரவும் மழை பொழிந்தது.மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை விடாமல் இரவு வரை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி, கல்லூரி சென்று திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தவாறு வீடு திரும்பினர். திடீர் மழையால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். தோட்ட பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும். சம்பா நடவு பணிகளுக்கு வயலை சீர் செய்ய இந்த மழை உதவும் என விவசாயிகள் கூறினர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை அருகே உள்ள ஈச்சங்கோட்டை, பஞ்சநதிக்கோட்டை, ஆழிவாய்க்கால், நடுவூர், செல்லம்பட்டி, பொய்யுண்டார்கோட்டை, கருக்காடிப்பட்டி, நத்தம், நெல்லுப்பட்டு, பாச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக நெல்விதைகளை விதைத்து நாற்றங்கால் தயார் செய்து வயலில் நடவு செய்தனர். பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக நாஞ்சிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து விட்டன. சில இடங்களில் வயலில் மழைநீர் தேங்கி நிற்பதால் நெல்மணிகள் முளைத்து விடும் அபாயம் உள்ளது. எனவே மகசூல் இழப்பு அதிகளவில் ஏற்படும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சீர்காழி அருகே நிம்மேலி சம்புராயர் கோடங்குடியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கொளஞ்சி ஆயாள்(45). இவர் நேற்று மாலை தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள வயலில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை வீட்டுக்கு ஓட்டி வர சென்றார். அப்போது மின்னல் தாக்கியதில் கொளஞ்சி ஆயாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சீர்காழி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.