சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த திங்கட்கிழமை காலை 5 நாள் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அதன்படி இன்று (19ம் தேதி) மாலை 4.20 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் அவர் டெல்லியில் இருந்து சென்னை திரும்புவதற்காக ஏற்கனவே திட்டமிட்டு, டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஆளுநர் ரவி, தனது 5 நாள் டெல்லி பயணத்தை 4 நாள் பயணமாக மாற்றி அமைத்துக் கொண்டார். இதனையடுத்து நேற்று இரவு 8.15 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், டெல்லியில் இருந்து அவர் சென்னைக்கு திரும்பினார்.
இதற்கிடையே டெல்லியில் ஆளுநர் ரவி, பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தமிழ்நாட்டில் சட்டம் -ஒழுங்கு நிலவரம் பற்றியும், தமிழ்நாட்டில் உயர்கல்வி துறையில் முன்னேற்றங்கள் ஏற்படுத்துவது குறித்தும் பேசியதாக, ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.