புதுடெல்லி: பீகாரைத் தொடர்ந்து 2ம் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கப்படுவதால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பிஎல்ஓக்களும் எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், எஸ்ஐஆர் நடைபெறும் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சியின் ஆய்வுக் கூட்டம் டெல்லியில் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை தாங்கினார். இதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர்கள், 12 மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது: வாக்காளர் பட்டியலை சுத்திகரித்தல் என்பது மறுக்க முடியாத அவசியமான பணி. ஆனால் அது நேர்மையான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இக்கூட்டத்தில் மாநில காங்கிரஸ் பிரதிநிதிகளின் பொதுவான கருத்து என்னவென்றால், தேர்தல் ஆணையம் சமூகத்தின் சில பிரிவுகளின் வாக்குகளை வேண்டுமென்றே நீக்க முயற்சிக்கிறது என்பதுதான்.
எஸ்ஐஆரின் வடிவமைப்பானது, இலக்கு வைக்கப்பட்ட வாக்குகளை நீக்குவதாகும். பீகாரிலும் இதைத் தான் நாங்கள் பார்த்தோம். இப்போது அவர்கள் 12 மாநிலங்களிலும் அதைத் தொடங்கப் போகிறார்கள். இந்த நாட்டில் ஜனநாயகத்தை அழிக்க தேர்தல் ஆணையத்தின் தீய முயற்சி இது. இது முற்றிலும் நெறிமுறையற்றது. முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமானது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தவறான நோக்கத்தையும், அரசியல்மயமாக்கலையும் அம்பலப்படுத்தும் வகையில் எஸ்ஐஆருக்கு எதிராக டெல்லி ராம்லீலா மைதானத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்படும். இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். நமது அரசியலமைப்பு கட்டமைப்பை அச்சுறுத்தும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் எதிர்ப்போம் என்றார்.
* பாஜவின் கைப்பாவையாக செயல்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்: கார்கே
கூட்டத்திற்கு முன்பாக மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பதிவில், ‘‘காங்கிரஸ் கட்சி வாக்காளர் பட்டியலின் நேர்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. ஜனநாயக நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை ஏற்கனவே சிதைந்துள்ள நிலையில், எஸ்ஐஆர் செயல்முறையில் தேர்தல் ஆணையத்தின் நடத்தை மிகவும் ஏமாற்றமளிக்கிறது. தேர்தல் ஆணையம் பாஜவின் நிழலில் செயல்படவில்லை என்பதை உடனடியாக நிரூபிக்க வேண்டும்.
பாஜவின் வாக்கு திருட்டுக்காக எஸ்ஐஆர் செயல்முறையை ஆயுதமாக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எங்கள் கட்சியினர் ஒவ்வொருவரும் இடைவிடாமல் விழிப்புடன் இருப்பார்கள். உண்மையான வாக்காளர்களை நீக்க அல்லது போலி வாக்காளர்களைச் சேர்க்க எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும், அது எவ்வளவு நுட்பமாக இருந்தாலும், நாங்கள் அம்பலப்படுத்துவோம். ஜனநாயகப் பாதுகாப்புகள் சிதைக்கப்படுவதை காங்கிரஸ் அனுமதிக்காது’’ என்றார்.
* உண்மையான வாக்காளர்களை நீக்குவதே எஸ்ஐஆர் நோக்கம்
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‘‘எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்த்து அரசியல் ரீதியாகவும், நிறுவன ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் காங்கிரஸ் போராட வேண்டும். சுத்தமான வாக்காளர் பட்டியலை வழங்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால் அந்த பொறுப்பை அரசியல் கட்சிகள் மீது சுமத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது. எஸ்ஐஆர் நடைமுறை அவசரமாக நடத்தப்படுகிறது. உண்மையான வாக்காளர்களை நீக்குவதே இதன் நோக்கம்’’ என்றார்.
* கணக்கெடுப்பு படிவம் 99% வழங்கப்பட்டுள்ளது
எஸ்ஐஆர் கணக்கெடுப்பு படிவங்கள் 12 மாநிலங்களில் உள்ள சுமார் 51 கோடி வாக்காளர்களில் 50.25 கோடிக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டு விட்டதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் தினசரி வெளியிடும் புள்ளிவிவரத்தில், 98.54 சதவீத படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. 12 மாநிலங்களில் வரும் டிசம்பர் 4ம் தேதி வரை கணக்கெடுப்பு படிவம் வழங்கும் நடைமுறை தொடரும்.


