தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் நேற்று அளித்த பேட்டி: நான் முதலமைச்சராக இருந்த போதுதான் மத்திய அரசிடம் பேசி தமிழகத்தில் பல மருத்துவ கல்லூரிகளை உருவாக்கினேன். ஜெயலலிதாவால் கூட அது முடியாமல் போனது என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து எனக்கு தெரியாது. ஒருவேளை அவர் அப்படி பேசி இருந்தால் அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஜெயலலிதாவை பற்றி யார் தவறாக பேசினாலும் அதை நான் வன்மையாக கண்டிப்பேன்.
2006 சட்டமன்ற தேர்தலில் எப்படி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதுபோல் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என நினைக்கிறேன். இதற்காக நான் அவருடன் கூட்டணிக்கு செல்வேன் என்று எண்ணிவிட வேண்டாம். நான் எப்போதும் எதார்த்தமாகத்தான் பேசுவேன்.
அமமுக 75 ஆண்டு கட்சிக்கும், 50 ஆண்டுகால கட்சிக்கும் இணையாக வளர்ந்து வருகிறது.
எனவே நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது எங்களுக்கு இல்லை. வரும் தேர்தலில் அமமுக உறுதியாக முத்திரை பதிக்கும். தற்போது தேஜ கூட்டணியில்தான் உள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் வேறு வழி இல்லாமல் கூட்டணியை விட்டு வெளியே சென்றார். இருந்தாலும் அவரை சமாதானப்படுத்தி கூட்டணிக்கு அழைத்து வர டெல்லி தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.