புதுடெல்லி: டெல்லி மாநகராட்சிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 7 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. டெல்லி மாநகராட்சியில் காலியாக இருந்த 12 வார்டுகளுக்கு, கடந்த நவம்பர் 30ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வானதால் இந்த இடங்கள் காலியாகின. இவற்றில் 9 இடங்கள் பாஜக வசமும், 3 இடங்கள் ஆம் ஆத்மி வசமும் இருந்தன. மாநகராட்சியில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க பாஜகவுக்கும், இழந்த செல்வாக்கை மீட்க ஆம் ஆத்மிக்கும் இந்தத் தேர்தல் மிக முக்கியமான சோதனையாக அமைந்தது. அதேவேளையில், கடந்த தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த காங்கிரஸ் கட்சி, தனது இருப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இத்தேர்தலை எதிர்கொண்டது.
இந்நிலையில் இன்று வெளியான தேர்தல் முடிவுகளின்படி, பாஜக 7 வார்டுகளில் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. குறிப்பாக தற்போதைய டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்ஜீத் ஷெராவத் ஆகியோர் வகித்து வந்த ஷாலிமார் பாக் மற்றும் துவாரகா வார்டுகளை பாஜக தக்கவைத்துக் கொண்டது. ஆளுங்கட்சியாக இருந்தும் ஆம் ஆத்மி கட்சியால் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்று தனது வெற்றிக் ‘கணக்கைத்’ தொடங்கியுள்ளது. ஏஐஎப்பி கட்சி ஒரு இடத்தை கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் டெல்லி மாநகராட்சியில் பாஜக தனது பலத்தை மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

