டெல்லி முதல்வர் தாக்கப்பட்ட வழக்கில் திருப்பம்; குஜராத்தில் சிக்கிய மற்றொரு கூட்டாளி கைது: அன்னா ஹசாரே போல் போராட்டம் நடத்த திட்டம்
புதுடெல்லி: டெல்லி முதல்வர் ரேகா குப்தா தாக்கப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியின் நண்பர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் ெடல்லி முதல்வர் ரேகா குப்தா, மக்கள் குறைதீர் முகாமில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சக்ரியா ராஜேஷ்பாய் கிம்ஜி (41) என்பவர், முதல்வர் ரேகா குப்தாவை திடீரென தாக்கினார். இந்த சம்பவத்திற்கு மத்தியில், தாக்குதல் நடத்திய சக்ரியாவை அங்கிருந்தவர்கள் பிடித்து சரமாரியாக அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், கைது செய்யப்பட்ட சக்ரியா மீது 2017 முதல் 2024 வரை ராஜ்கோட் பக்திநகர் காவல் நிலையத்தில் தாக்குதல் மற்றும் மது வைத்திருந்தது தொடர்பாக ஐந்து வழக்குகள் உள்ளன. தெருநாய்களை இடமாற்றம் செய்வது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, குஜராத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவைப் போல டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டு டெல்லி வந்ததாக கைதான சக்ரியா கூறினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது நண்பரான தஹ்சீன் சையது என்பவருக்கு முதல்வரின் ஷாலிமார் பாக் இல்லத்தின் வீடியோவை அனுப்பியது தெரியவந்தது. பதிலுக்கு தஹ்சீன், சக்ரியா கிம்ஜிக்கு ரூ.2,000 அனுப்பியுள்ளார்.
மேலும், இந்த தாக்குதலுக்கு முன்பு இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு ராஜ்கோட்டில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட தஹ்சீன், சக்ரியாவுடன் நேருக்கு நேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர், அவர் நேற்று அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டார். சக்ரியாவின் செல்போன் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், ராஜ்கோட்டில் உள்ள அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோரிடம் டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.