டெல்லி கார் வெடிப்பு நிகழ்ந்த சோகமான நேரத்தில் இந்தியா உடன் இஸ்ரேல் துணையாக நிற்கும்: நெதன்யாகு உறுதி
ஜெருசலேம்: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10ம் தேதி பரபரப்பான மாலை நேரத்தில் போக்குவரத்து சிக்னலில் நின்ற கார் வெடித்துச் சிதறியது. இதில், அருகில் இருந்த பல வாகனங்கள் தீப்பிடித்து 12 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தீவிரவாத செயல் என்றும், இந்த கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட யாரும் தப்பிக்க முடியாது என்றும் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். டெல்லி கார் வெடிப்பு நிகழ்ந்த சோகமான நேரத்தில் இந்தியா உடன் இஸ்ரேல் துணையாக இருக்கும். பயங்கரவாதம் நமது நகரங்களை தாக்கலாம்; நமது ஆன்மாக்களை அசைக்க முடியாது என என்றும் கூறினார்.
