Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லி கார் குண்டு வெடிப்பு தற்கொலை தாக்குதல் நடத்திய டாக்டர் குழு: போலி ஆவணங்கள் மூலம் கைமாறிய கார்; என்ஐஏ விசாரணை தீவிரம்

புதுடெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய நபர் காஷ்மீரின் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் நபி என பல்வேறு ஆதாரங்கள் சிக்கி உள்ளன. இவருக்கும், அரியானா உள்ளிட்ட இடங்களில் கைதான தீவிரவாத டாக்டர்கள் குழுவுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. எனவே டெல்லி கார் குண்டுவெடிப்பு தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. இந்த சதித்திட்டத்தின் பின்னால் யார், யார் உள்ளனர் என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிரமாக விசாரித்து வருகிறது.

தலைநகர் டெல்லியில் உயர் பாதுகாப்பு கொண்ட செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை 6.52 மணி அளவில் சிக்னலில் நின்ற கார் திடீரென வெடித்துச் சிதறியது. பரபரப்பான மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த இடத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தால் பலி எண்ணிக்கை 12 ஆக நேற்று அதிகரித்தது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசாருடன் தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்பு படை, உளவுத்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் இணைந்து விசாரணை நடத்தின.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு முன்பாக, 2,900 கிலோ வெடி பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்ததாக 3 டாக்டர்கள் உட்பட 8 பேர் கொண்ட தீவிரவாத நெட்வொர்க்கை அரியானா, உபி, காஷ்மீர் போலீசார் இணைந்து கைது செய்திருந்தனர். இந்த கைது நடவடிக்கை நடந்த சிறிது நேரத்தில் செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு நடந்ததால் இரண்டுக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

அதே சமயம், குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 காரை யார் ஓட்டி வந்தது, யாருடைய கார் அது என்பது குறித்தும் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரித்தனர். இதில், காரை ஓட்டி வந்தது காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் லெத்போராவைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி என்பது தெரியவந்தது. இவர் கறுப்பு நிற மாஸ்க் அணிந்து கார் ஓட்டியது, சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளில் இருந்து உறுதி செய்யப்பட்டது. இந்த உமர் நபிக்கும், தீவிரவாத டாக்டர் குழுவுக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் காஷ்மீரில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது தொடர்பாக, அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் முசம்மில் கனாயியை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் தங்கியிருந்த வாடகை வீட்டில் இருந்து 360 கிலோ வெடிபொருட்கள், வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவர் காஷ்மீரை சேர்ந்தவர். முசும்மில் அளித்த தகவலின் அடிப்படையில் லக்னோவை சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சயீத் மற்றும் காஷ்மீரை சேர்ந்த மற்றொரு டாக்டர் ஆதில் அகமது ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் ஜெய்ஷ் இ முகமது மற்றும் ஐஎஸ் அமைப்பின் இந்திய கிளையான அன்சார் கஸ்வத் உல் ஹிந்த் அமைப்பிற்காக வேலை செய்தது தெரியவந்தது. இதில், ஷாஹீன் சயீத் இந்தியாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் பெண்கள் படையை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டவர். இவர்கள் இந்தியாவில் பயங்கர நாசவேலைகள் செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீவிரவாத டாக்டர்கள் குழுவில் ஒருவர் தான் உமர் நபி. இவரும் அரியானாவின் அல் பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.

தனது கூட்டாளிகள் சிக்கிக் கொண்டதால், தானும் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் உமர் நபி பரிதாபாத்தில் இருந்து ஐ20 காரில் நேற்று முன்தினம் காலை டெல்லிக்கு வந்துள்ளார். காரில் பல்வேறு இடங்களுக்கு சென்ற அவர் இறுதியில் செங்கோட்டை அருகே உள்ள பார்க்கிங்கில் 3 மணி நேரம் காரை நிறுத்தி உள்ளார். பின்னர், காரை அவர் ஓட்டிச் சென்ற போது செங்கோட்டை அருகே சிக்னலில் கார் வெடித்துச் சிதறியிருக்கிறது. காரில் அதிகளவு அம்மோனியம் நைட்ரேட்டை உமர் அலி எடுத்துச் சென்றிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிக்னலில் கார் நிறுத்தப்பட்ட போது காரில் இருந்த அம்மோனியம் நைட்ரேட் எதிர்பாராத விதமாக வெடித்திருக்கலாம் அல்லது உமர் அலி தற்கொலை தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர். இதனால், குண்டுவெடிப்பில் பலியான 12 பேரில் உமர் நபியும் ஒருவராக இருக்கலாம் என்பதால், வெடித்துச் சிதறிய காரில் கிடைத்த உடல் பாகங்களை டிஎன்ஏ சோதனை செய்து, புல்வாமாவில் உள்ள உமர் நபியின் தாயாரிடம் டிஎன்ஏ சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார் மொத்தம் 7 முறை பல்வேறு நபர்களிடம் விற்கப்பட்டுள்ளது. கடைசியாக புல்வாமாவை சேர்ந்த தாரிக் என்பவர் உமர் நபிக்கு காரை விற்றுள்ளார். இதனால் தாரிக்கை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். பல்வேறு போலி ஆவணங்கள் மூலம் கார் கைமாறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அல் பலா பல்கலைக்கழகத்தில் நேற்று விசாரணை நடத்திய போலீசார் 50க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக நேற்று 2 முறை உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில், டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை சதிகாரர்களையும் வேட்டையாட வேண்டுமென அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணையை விரைவாக முடிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். இந்த உயர்மட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, இந்த வழக்கு டெல்லி போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து என்ஐஏ தனது விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறது.

* பலியானோரில் 6 பேர் அடையாளம் தெரிந்தது

டெல்லி கார் குண்டுவெடிப்பில் பலியான 12 பேரில் 6 பேரின் அடையாளம் தெரிந்துள்ளது. உபி சாம்லி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது நவ்மன் அன்சாரி தனது கடைக்கு அழகுசாதன பொருட்கள் வாங்க டெல்லி வந்த நிலையில் குண்டுவெடிப்பில் சிக்கி பலியாகி உள்ளார். உபி அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் லோகேஷ் அகர்வால், அசோக் அகர்வால். இருவரும் நண்பர்கள். அசோக் அகர்வால் டெல்லி போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். உறவினரை பார்க்க லோகேஷ் டெல்லிக்கு வந்த நிலையில் அசோக்கை சந்திக்க செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அழைத்துள்ளார். இருவரும் குண்டுவெடிப்பில் பலியாகினர். உபி சரவஸ்தி மாவட்டத்தில் பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கும் தினேஷ் மிஸ்ரா, மீரட்டை சேர்ந்த இ ரிக்ஷா ஓட்டுநர் மோஷின் ஆகியோரும் பலியானவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுதவிர, டாக்சி ஓட்டுநர் பங்கஜ் சைனி (22) என்பவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

* ஜனாதிபதி முர்முவிடம் விளக்கினார் அமித்ஷா

அங்கோலா நாட்டிற்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேற்று அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தகவல்களை கேட்டறிந்தார். அப்போது குண்டுவெடிப்பு தொடர்பாகவும், தற்போதைய நிலவரங்களையும் அமித்ஷா விளக்கினார்.

* இங்கிலாந்து நாட்டவர்களுக்கு அறிவுறுத்தல்

டெல்லி கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து, இங்கிலாந்து வெளியுறவுத்துறை அலுவலகம் இந்தியா வரும் அந்நாட்டவர்களுக்கு பயண அறிவுறுத்தல்களை புதுப்பித்துள்ளது. அதில், ‘‘டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது. எனவே இந்தியா செல்லும் இங்கிலாந்து நாட்டவர்கள் சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு அருகாமையில் செல்ல நேர்ந்தால், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரைகள்படி நடந்து கொள்ள வேண்டும். உள்நாட்டு மீடியா தகவல்களையும் கவனித்து செயல்பட கேட்டுக் கொள்கிறார்கள்’’ என கூறப்பட்டுள்ளது.

* குடும்பத்தினர் அதிர்ச்சி

குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரை ஓட்டியதாக நம்பப்படும் உமர் நபியின் மைத்துனி முசாமில் கூறுகையில், ‘‘உமர் சிறு வயதில் இருந்தே அமைதியாக இருப்பான். தனிமை விரும்பி. படிப்பு, தனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவான். பரிதாபாத்தில் ஒரு கல்லூரியில் பேராசிரியாக இருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை போன் செய்து பேசும் போது கூட தேர்வுக்காக அதிக வேலை இருப்பதாகவும், 3 நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வருவதாகவும் கூறியிருந்தார். குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாக இருந்தவர் உமர்’’ என்றார். உமர் நபியின் தந்தை குலாம் நபி பட்டை புல்வாமா போலீசார் நேற்று அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பெண்கள் பிரிவான ஜமாத் உல் மோமினாத் தலைவராக இருந்ததாக கூறப்படும் ஷாஹீன் சயீத்தின் தந்தை சையது அகமது அன்சாரி லக்னோவில் அளித்த பேட்டியில், ‘‘ஷாஹீன் கைதானதை செய்தியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். நான் கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்பு ஷாஹீனுடன் பேசினேன். டாக்டர் முசம்மில் அல்லது இதுபோன்ற செயல்களுடன் தொடர்புடைய யாரையும் அவர் குறிப்படவில்லை. அவர்களைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை’’ என்றார்.