டெல்லி கார் குண்டுவெடிப்பு விவகாரம் மேற்கு வங்க மருத்துவ மாணவர் கைது: மேலும் 3 டாக்டர்களை பிடித்து விசாரணை
கொல்கத்தா: டெல்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேற்கு வங்க மருத்துவ மாணவர் ஒருவரை என்ஐஏ கைது செய்துள்ளது. இதுதவிர, அல் பலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மேலும் 3 டாக்டர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிக்கின்றனர். டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10ம் தேதி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் 13 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம், திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இதில் டாக்டர்கள் குழுவினர் ஸ்லீப்பர் செல்களாக இருந்து நாசவேலையை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இத்தாக்குதலில் காரை ஓட்டிய அல் பலா பல்கலைக்கழக உதவி பேராசிரியர் டாக்டர் உமர் நபி தற்கொலை படையாக செயல்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. குண்டுவெடிப்புக்கு முன்பாக வெடிபொருட்களை பதுக்கியதாக அல் பலா பல்கலையை சேர்ந்த காஷ்மீரை சேர்ந்த டாக்டர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர் ஜனிசூர் ஆலம் என்கிற நிசார் ஆலமை தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர் அரியானாவின் அல் பலா பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தின் உத்தர் தினாஜ்பூரின் தல்கோலா அருகே உள்ள கோனல் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவரும் லூதியானாவில் வசிப்பவருமான நிசார் ஆலம் சமீபத்தில் தனது சொந்த கிராமத்திற்கு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று சென்று திரும்பும் போது கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவருக்கும் டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் அதற்கான ஆதாரங்களை என்ஐஏ வெளியிடவில்லை. நிசார் ஆலமை சிலிகுரியில் வைத்து என்ஐஏ விசாரித்து வருகிறது. இதே போல அல் பலா பல்கலைக்கழகத்தில் முன்பு பணியாற்றியவரான பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டை சேர்ந்த 45 வயது அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். இவர் கடந்த 2 ஆண்டாக பதன்கோட்டில் உள்ள தனியார் மருத்துவனைமயில் பணியாற்றி வருகிறார்.
இதே போல, டெல்லி சிறப்பு பிரிவு போலீசாரும், மத்திய புலனாய்வு அமைப்பினரும் நேற்று முன்தினம் இரவு அரியானாவின் தவுஜ், நுஹ் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்திய சோதனையை தொடர்ந்து அல் பலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த முகமது மற்றும் முஷ்டாகிம் எனப்படும் 2 டாக்டர்கள் பிடிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்திய காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் நபி மற்றும் 360 கிலோ வெடிமருந்துகளை வீட்டில் பதுக்கிய டாக்டர் முசம்மில் கனாயி ஆகியோருக்கு நெருங்கிய நண்பர்கள்.
இவர்கள் முசம்மிலுடன் அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளனர். மேலும், நுஹ் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர். இவர், லைசென்ஸ் இல்லாமல் உரங்களை பலருக்கு விற்றுள்ளார். இவரிடமிருந்து, டாக்டர்கள் குழுவினர் அம்மோனியன் நைட்ரேட் வாங்கினார்களா என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது.
* புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு
டெல்லி கார் குண்டுவெடிப்பின் போது செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் குண்டுவெடித்ததும் ரயில் நிலைய ஜன்னல் கண்ணாடிகள் கடுமையான அதிர்வு ஏற்படுவதும், பயங்கர தீ ஜூவாலை ஒளியும் பதிவாகி உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து பொருட்கள் கீழே விழுவதும், பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடுவதும் பதிவாகி உள்ளது.
குண்டுவெடிப்பு நடந்த சமயத்தில் உமர் நபியின் காருக்கு அருகில் சிக்னலில் நின்றிருந்த மற்ற வாகனங்களின் பட்டியலை தயாரிக்கும் அதிகாரிகள் அவர்களின் ஓட்டுநர்கள், உரிமையாளர்களிடம் விசாரிக்க உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கிரிமினல் சதி தொடர்பாக புதிய வழக்கையும் பதிவு செய்துள்ளனர்.
* குண்டு தயாரிக்க பயன்படுத்தியது ‘சாத்தானின் தாய்’
டெல்லி குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தி காரின் எஞ்சிய பாகங்களை வைத்து தடய அறிவியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், குண்டு தயாரிக்க டிரைஅசிட்டோன் டிரை பெராக்சைடு (டிஏடிபி) ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டிஏடிபியுடன் அம்மோனியம் நைட்ரேட்டை கலக்கும் போது, அது கண்டறிவதற்கு கடினமான ஆபத்தான வெடிபொருளாக மாறும். ஆபத்தான இந்த கலவையை ‘சாத்தானின் தாய்’ என பாதுகாப்பு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
* 4 நாட்களுக்கு பிறகு மெட்ரோ ரயில் நிலையம் திறப்பு
டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து செங்கோட்டை அருகே உள்ள லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ரயில் நிலைய நுழைவாயில் 2 மற்றும் 3 வழியாக பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது தடயங்கள் சேகரிக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு லால் குயிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் 2, 3வது நுழைவாயில்கள் நேற்று திறக்கப்பட்டன.


