டெல்லி: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மருத்துவர் உமர்நபிதான் என்பது DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10ம் தேதி பரபரப்பான மாலை நேரத்தில் போக்குவரத்து சிக்னலில் நின்ற கார் வெடித்துச் சிதறியது. இதில், அருகில் இருந்த பல வாகனங்கள் தீப்பிடித்து 12 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த நபர், காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் முகமது உமர் நபி (28) என சந்தேகிக்கப்படுகிறது.
இவருடன் பணியாற்றிய காஷ்மீரைச் சேர்ந்த முசம்மில் அகமது மற்றும் அதீல் அகமது, ஷாஹீன் சயீத் உள்ளிட்ட டாக்டர்களுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லி கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. காரில் அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளுடன் தற்கொலை தாக்குதலை உமர் நபி நடத்தியிருக்கலாம் என்பதால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கிய இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிய தீவிர விசாரணை நடந்து வருகிறது.
கார் வெடிப்பு சம்பவத்தில் உமர் முகமது தற்கொலை குண்டாக வெடித்திருப்பார் என கருதப்படுவதால் கார் மற்றும் வெடிப்பு பகுதியில் கிடந்த சதைப்பகுதிகளை எடுத்து, அதை உமர் முகமதுவின் தாயார் டி.என்.ஏ.வுடன் ஒப்பிட நடவடிக்கைககள் எடுக்கப்பட்டன. உமர் முகமது தாயாரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒப்பீட்டு பரிசோதனை நடந்து வந்தது. ஆய்வின் முடிவில், காரை ஓட்டி வந்தது உமர் நபி தான் என்பது உறுதியாகி இருப்பதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
அவரின் தாயிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியும், காரில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியும் 100 சதவீதம் ஒத்துப்போனதையடுத்து உமர் முகமது தற்கொலை குண்டாக வெடித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
