டெல்லி கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அல் பலா பல்கலை. நிறுவனர் கைது: அமலாக்கத்துறை சோதனையில் அதிரடி நடவடிக்கை
புதுடெல்லி: டெல்லியில் கடந்த 10ம் தேதி செங்கோட்டை அருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட காருடன் காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் உமர் உன் நபி (28) தற்கொலை தாக்குதலை நடத்தியதில் 15 பேர் பலியாகினர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி, காஷ்மீரில் தீவிர விசாரணை நடந்து வருகிறது. குண்டுவெடிப்புக்கு முன்பாக காஷ்மீரை சேர்ந்த டாக்டர் முசம்மில், அதீல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் தீவிரவாத டாக்டர்கள் குழு சம்மந்தப்பட்டிருப்பதும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்துடன் தொடர்புடையவர்களாக இருப்பதும் தெரியவந்தது. பல்கலைக்கழக தங்குமிடங்களில் தீவிரவாத சதிக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகம் மீதான பிடி இறுகியது. மேலும் இந்த பல்கலைக்கழகம் பல்வேறு நிதி முறைகேடுகள், போலி நிறுவனங்களை நடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனால் 25 ஆண்டு பழமையான நிதி மோசடி வழக்கில் அல் பலா பல்கலைக்கழக நிறுவனரின் சகோதரர் ஹமூத் சித்திக் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று அல் பலா அறக்கட்டளைக்கு சொந்தமான 25 இடங்களில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு நடத்தியது. இதில் தீவிரவாதத்திற்கு நிதி உதவி அளிப்பதற்கான பல நிதி முறைகேடுகளுக்கான ஆதாரங்கள் சிக்கிய நிலையில், பல்கலைக்கழக நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கை அமலாக்கத்துறை நேற்றிரவு கைது செய்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, காரில் வெடிபொருட்களை நிரப்பி தற்கொலை தாக்குதல் நடத்திய உமர் உன் நபியின் சகோதரர் ஜாகூர் இல்லாஹியை ஸ்ரீநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த அக்டோபர் 26 முதல் 29ம் தேதி வரை உமர் நபி காஷ்மீரில் இருந்த போது, அவனது செல்போனை சகோதரர் இல்லாஹியிடம் கொடுத்துள்ளான்.
அதில், அல் கொய்தா, ஐஎஸ் போன்ற தீவிரவாத அமைப்புகளின் தற்கொலை குண்டுவெடிப்புகள் தொடர்பான வீடியோக்களை உமர் பார்த்திருப்பது தெரியவந்துள்ளது. தற்கொலை தாக்குதல் பற்றி பேசும் பல வீடியோக்களையும் உமர் எடுத்துள்ளார். இஸ்லாத்தில் தற்கொலை பாவச் செயல் என கூறப்பட்டுள்ள நிலையில், அதை இளைஞர்கள் தவறாக புரிந்து கொண்டிருப்பதாகவும், மதத்திற்காக செய்யும் தற்கொலை தியாக நடவடிக்கை என்றும் உமர் பேசிய 2 நிமிட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
* உமர் கூட்டாளிக்கு 10 நாள் என்ஐஏ காவல்
உமர் உன் நபியின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவனான, ஜசிர் பிலால் வானியை என்ஐஏ அதிகாரிகள் நேற்று டெல்லி முதன்மை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அவனை 10 நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்தனா அனுமதி வழங்கினார். இந்த வானி தான், ஹமாஸ் போராளிகள் பாணியில் ராக்கெட் மற்றும் டிரோன்களை ஏவி டெல்லியில் தாக்குதல் நடத்தும் திட்டத்திற்காக உமருக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியவன்.
* காஷ்மீர் முஸ்லிம்கள் அனைவரையும் சந்தேகப்படக் கூடாது
பிடிப்பட்ட டாக்டர் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் நவ்காம் காவல் நிலையத்தில் வெடித்ததில் 9 பேர் பலியாகினர். 32 பேர் காயமடைந்தனர். அவர்களில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை நேற்று மருத்துவமனையில் சந்தித்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அளித்த பேட்டியில், ‘‘ஒயிட் காலர் தீவிரவாதத்தில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
அதே சமயம், அப்பாவி மக்களை துன்புறுத்தக் கூடாது. அனைத்து காஷ்மீர் மக்களையும், குறிப்பாக காஷ்மீர் முஸ்லிம்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கூடாது. இதே கருத்தை தான் வடக்கு மண்டல முதல்வர்கள் மாநாட்டிலும் நான் வலியுறுத்தி உள்ளேன்’’ என்றார்.


