Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் இருந்து எனக்கு இதுவரை அழைப்பு இல்லை அதிமுகவில் இணைவதற்கு எந்த நிபந்தனையும் இல்லை: மனம் திறந்தார் ஓபிஎஸ்

அவனியாபுரம்: அதிமுகவில் இணைப்புக்கு எந்த நிபந்தனையும் இல்லை என ஓபிஎஸ் கூறியுள்ளார். சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு நேற்று வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஒன்றிணையை வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில், எந்த ரூபத்தில், எப்படி வந்தாலும் நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். அதற்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். ஒன்றிணைந்தால் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற கருத்து வரவேற்கக் கூடியது. அதுதான் நடக்கும்.

ஒன்றிணைய வேண்டும் என்கிற எண்ணம் அனைவரின் மனதிலும் உள்ளது. அப்படி ஒன்றிணைந்தால் தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணம் நிறைவேறும். ஒன்றிணைவதில் எடப்பாடி மாறுபடுவதற்கான காரணம் என்ன என்பதை தயவு செய்து என்னை கேட்பதை விட்டுவிட்டு அவரிடம் போய் கேளுங்கள். எடப்பாடியை தவிர முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் நான் கூட்டணிக்குள் வருவேன் என டிடிவி கூறியது ஆழமான கருத்து, சத்தான கருத்து. என்னைப் பொறுத்தவரை கட்சியில் இணைவது குறித்து நான் எந்தவித நிபந்தனையும் வைக்கவில்லை.

நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பரும் இல்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒன்றிணைய எடப்பாடி ஒப்புக்கொண்டால் அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா என்பதில், பேச வேண்டிய பல பிரச்னைகள் உள்ளன. 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எங்கள் தர்ம யுத்தத்தின் அடிப்படையில் அந்த வழக்குகள் உள்ளன. அது நிறைவேறும்பட்சத்தில் நாங்கள் யோசனை செய்வோம்.

செங்கோட்டையனின் முயற்சி உறுதியாக வெற்றி பெறும். அதற்கு எனது வாழ்த்துகள். டெல்லியில் இருந்து இதுவரை எனக்கு அழைப்பு இல்லை. அதிமுகவை துண்டாக்கி விளையாடுவதை பாஜ ரசிக்கிறது என நான் எண்ணவில்லை. உடனுக்குடன் கருத்துக்கணிப்பு வெளியிட்டு கேள்வியை கேட்டால் எப்படி சொல்வது? பொறுத்திருந்து பாருங்கள், தேர்தல் வர வர எண்ணங்கள் நிறைவேறும். தினந்தோறும் மக்களை சந்திக்கிறேன். செங்கோட்டையனிடம் தினசரி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். இவ்வாறு கூறினார்.

முன்னதாக தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து சென்னை செல்ல காரில் கிளம்ப முயன்றபோது ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள், ‘‘தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை தவிர, வேறு யாரை அறிவித்தாலும் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணையத் தயார் என டிடிவி.தினகரன் கூறியுள்ளாரே’’ என்றும், ‘‘ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்தது அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துமா’’ என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சரமாரியாக எழுப்பினர்.  ஆனால், எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் ஓ.பன்னீர்செல்வம் மவுனமாக சென்றது குறிப்பிடத்தக்கது.