சென்னை: தலைநகர் டெல்லி செங்கோட்டையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து, சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் ஆகியோர் மேற்பார்வையில் பெருநகரம் முழுவதும் உள்ள 12 காவல் மாவட்டங்களில் உள்ள 105 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
குறிப்பாக என்ஐஏ வழக்கு தொடர்பாக கண்காணிப்பு பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் குற்றப்பின்னணியில் உள்ள நபர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள், கோயில்கள், மசூதிகள் தேவாலயங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

