லண்டன்: போர்டிங் பாஸ் பெற்ற பயணி விமானத்தில் இல்லாததால், லண்டனில் இருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஓடுதளத்திலிருந்து மீண்டும் நிறுத்தப்பட்டது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஏஐ 162, நேற்று ஓடுதளத்திலிருந்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. விமானம் புறப்படத் தயாரான நிலையில், பயணிகளின் எண்ணிக்கையைச் சரிபார்த்தபோது, போர்டிங் பாஸ் பெற்ற பயணி ஒருவர் விமானத்தில் இல்லாதது தெரியவந்தது.
விசாரணையில், அந்தப் பயணி போர்டிங் பாஸை ஸ்கேன் செய்த பிறகு, புறப்பாடு பகுதிக்குச் செல்வதற்குப் பதிலாக, தவறுதலாக வருகைப் பகுதிக்குச் சென்றுவிட்டது தெரியவந்தது. விமானப் பயணப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, ஒரு பயணியும் அவரது உடைமைகளும் ஒரே விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். இதன் காரணமாக, விமானம் மீண்டும் நிறுத்தப்பட்டு, அந்தப் பயணியின் உடைமைகள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டன. இதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில், அந்தப் பயணி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தால் மற்ற பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்ட போதிலும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.