Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

டெல்லி குண்டுவெடிப்பு உமர்நபியின் கூட்டாளி கைது: இன்னொருவருக்கு 10 நாள் என்ஐஏ காவல்

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே நவம்.10 ஆம் தேதி கார் குண்டு வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பில் தற்கொலைப்படையாக செயல்பட்ட டாக்டர் உமர் உன் நபியின் கூட்டாளிகளை பாதுகாப்பு படையினர் தேடி கைது செய்து வருகிறார்கள். அந்த அடிப்படையில் நேற்று ஜசிர் பிலால் வானி என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பு ஸ்ரீநகரில் வைத்து கைது செய்தது. அனந்த்நாக்கில் உள்ள காசிகுண்டைச் சேர்ந்த வானி, கொடிய கார் குண்டுவெடிப்புக்கு முன்னதாக டிரோன்களை மாற்றியமைத்து ராக்கெட்டுகளை உருவாக்க முயற்சிப்பதன் மூலம் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கியதாகக் கூறப்படுகிறது. டேனிஷ் என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் வானி, ஸ்ரீநகரில் என்ஐஏ குழுவால் கைது செய்யப்பட்டார். இவர் பயங்கரவாதி உமர் உன் நபியுடன் நெருக்கமாகப் பணியாற்றினார் என்று என்ஐஏ தெரிவித்து உள்ளது.

10 நாள் காவல்: இதற்கிடையே டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான அமீர் ரஷீத் அலியை என்ஐஏ அதிகாரிகள் 10 நாள் காவலில் எடுத்துள்ளனர். டாக்டர் உமர் குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார் அமீர் ரஷீத் அலியின் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து அமீர் பலத்த பாதுகாப்புடன் பாட்டியலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை என்ஐஏ அதிகாரிகள் 10 நாள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் உமர் நபி படித்த பல்கலைக்கழகத்தின் தலைவர் ஜாவேத் சித்திக்கிற்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.இந்நிலையில் ஜாவேத் சித்திக்கின் சகோதரர் ஹமூத் அகமத் சித்திக்கை போலீசார் கைது செய்துள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன் ம.பியில் நடந்த மிகப்பெரிய மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட ஹாவோத் நேற்று முன்தினம் கைது ஆனார்.

பலி எண்ணிக்கை 15ஆனது

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் பலியானார்கள். குண்டு வெடிப்பின்போது காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் லுக்மான்(50) மற்றும் வினய் பதக்(50) என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.