டெல்லி குண்டுவெடிப்பு விவகாரத்தில் காஷ்மீர் கூட்டாளியை கைது செய்தது என்ஐஏ: தற்கொலை படைக்கு ஆள் தேடியது அம்பலம்
புதுடெல்லி: நாட்டையே உலுக்கிய டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கை டெல்லி போலீசாரிடம் இருந்து பெற்ற தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முதல் முறையாக காஷ்மீரை சேர்ந்த அமிர் ரஷித் அலி என்பவரை என்ஐஏ நேற்று கைது செய்துள்ளது. காஷ்மீரின் பாம்போர் மாவட்டத்தின் சம்போரா பகுதியை சேர்ந்த அமிர், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்திய காரை வாங்கவும், சதித்திட்டத்தை நிறைவேற்றவும் உமர் நபிக்கு உதவியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட கார் அமிர் பெயரிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் முதல் முறையாக என்ஐஏ, உமர் நபியை ‘தற்கொலை படை தீவிரவாதியாக’ குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையே, செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 9 மிமீ தோட்டக்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். கைப்பற்றப்பட்ட 3 தோட்டா கேட்ரேஜ்களில் 2 வெடிக்கக் கூடியவை.பொதுவாக 9 மிமீ தோட்டாக்கள் சிறப்பு படைப்பிரிவினருக்கு வழங்கப்படும். இவற்றை உரிய அனுமதி பெற்றே தனிநபர்கள் வாங்க முடியும். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
டெல்லி குண்டுவெடிப்புடன் தொடர்புடைய தீவிரவாத டாக்டர் குழுவினரை சந்தித்தாக காஷ்மீரின் காசிகுந்தை சேர்ந்த பட்டதாரி ஜாசிர் என்ற டேனிஷ் என்பவரை ஸ்ரீநகர் போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். ஜாசிர், கடந்த ஆண்டு அக்டோபரில் குல்காமில் உள்ள மசூதியில் தீவிரவாத டாக்டர் கும்பலை சந்தித்ததாக ஒப்புக் கொண்டுள்ளான். அதன் பிறகு அந்த வாலிபரை அல் பலா பல்கலைக்கழக வளாகத்தில் வாடகை வீடு ஒன்றில் டாக்டர்கள் குழு தங்க வைத்துள்ளது.
அங்கு, ஜாசிரை தற்கொலைப் படையாக மாற்ற உமர் நபி மூளைச்சலவை செய்துள்ளான். ஆனால், ஜாசிர் தனது குடும்ப வறுமையை காரணம் காட்டியும், இஸ்லாத்தில் தற்கொலை பாவச் செயல் என்பதாலும் தற்கொலை படையாக மாற மறுத்ததால் கடந்த ஏப்ரலில் இந்த திட்டம் தவிடுபொடியானது. அதன் பின், கூட்டாளிகள் கைதானதால் வேறு வழியில்லாமல் உமர் நபியே தற்கொலை படையாக மாறி டெல்லி குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


