டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்: காங். கட்சி வலியுறுத்தல்
புதுடெல்லி: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் மற்றும் என்று காங்கிரஸ் கட்சியானது வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கேரா பேசுகையில்,‘‘48 மணி நேரத்துக்கு பின் இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்று அமைச்சரவை அறிவித்தது. உளவுத்துறை அமைப்புகள் இருந்தபோதும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உன்னிப்பாக கண்காணித்தபோதும் 2900கிலோ வெடிப்பொருள் பரிதாபாத்தை எவ்வாறு வந்தடைந்தது.
ஒரு காரில் செங்கோட்டை அருகே இவ்வளவு வெடிப்பொருள் இருந்தது. இதற்கு யார் பொறுப்பேற்கிறார்கள்? பொறுப்புக்கூறல் சரிசெய்யப்படுகின்றது. தீவிரவாத தாக்குதல் நடந்தபோது நாங்கள் அரசுடன் நிற்கிறோம். எதிர்காலத்திலும் அவ்வாறு இருப்போம். ஆனால் இது யாருடைய தோல்வி? இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என்ற கேள்விகளை கேட்பது எங்களது கடமையாகும். எனவே பிரதமர் மோடி தலைமையில் உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.
இது ஒரு தீவிரமான சவாலாகும். இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டி இருப்பதால் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். பஹல்காம் மற்றும் ஆபரேஷன் சிந்தூருக்கு பின் எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் போர்ச் செயலாக கருதப்படும் என்று புதிய கோட்பாட்டை அரசு கொண்டு வந்துள்ளது. அது உண்மையா?\\” என்றார்.
