சென்னை: டெல்லியில் குண்டு வெடிப்பு சம்பவ குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
* அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிர் இழப்புகள் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். அதே நேரத்தில், பரிதாபாத்தில் நமது பாதுகாப்பு படையினரின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். கிட்டத்தட்ட 300 கிலோ வெடிபொருட்கள் மற்றும் பல ஏகே 47 துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருப்பது, நமது நாடு தொடர்ந்து எதிர்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசும், காவல்துறையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நான் கேட்டுக்கொள்கிறேன். அதிக கண்காணிப்பு தேவைப்படும் கடலோரப் பகுதிகளிலும் சிறப்பு கவனம் மற்றும் அதிகரித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
* தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குண்டுவெடிப்பை நிகழ்த்தி வெறியாட்டத்தைத் தொடங்கியவர்கள் யார் என்பதை உடனடியாகப் புலனாய்வு செய்து அறிய வேண்டும். இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அலசி ஆராய வேண்டும். இந்தச் செயலைச் செய்தது யார்? இது தீவிரவாத தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதை ஒன்றிய அரசு உடனடியாகக் கண்டறிய வேண்டும். தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அதே வேளையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ: செங்கோட்டை என்பது இந்தியாவின் வரலாற்றுப் பெருமையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இடமாகும். அந்த இடத்திலே இதுபோன்ற பயங்கரவாத செயல் நடப்பது, நம் தேசத்தின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் கேடுகெட்ட செயலாகும். குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி விரைந்து தண்டிக்கப்பட வேண்டும்.
