Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

டெல்லி விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு மின்னணு வருகை அட்டை: இன்று அறிமுகம்

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் தங்கள் வருகைத் தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் வகையில் மின்னணு வருகை அட்டை இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் அவர்களின் பாஸ்போர்ட் எண், வருகைக்கான விவரம், தங்குமிடம், முகவரி, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் போன்ற தகவல்களை விமான நிலையத்தில் உள்ள குடிவரவு அலுவலகத்தில் தரப்படும் படிவத்தில் நிரப்பித் தர வேண்டும்.

டெல்லி விமான நிலையத்தில் இந்த நடைமுறை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. இதற்காக வெளிநாட்டு பயணிகளுக்கு இ வருகை அட்டை வழங்கும் வசதி இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இது குறித்து டெல்லி விமான நிலைய பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் டயல் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘இனி டெல்லி விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகள் டிஜிட்டல் முறையில் அவர்களின் வருகை தகவல்களை பதிவு செய்யலாம்.

இந்த பயணிகள் நீண்ட வரிசையில் காக்க வேண்டியதை தவிர்க்கும். காகித பயன்பாட்டை குறைக்க முடியும். பயணிகள் 3 நாட்களுக்கு முன்பாக கூட இந்த படிவத்தை பூர்த்தி செய்யலாம்’’ எனக் கூறப்பட்டுள்ளது. தாய்லாந்து, இந்தோனேசியா, சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் இதே போன்ற இ வருகை அட்டை வசதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.