டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு; தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல்
சென்னை: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசிய நிலையில் தற்போது அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் நகர்வுகள் குறித்து அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செங்கோட்டையன் விதித்த கெடு முடிந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி சென்றுள்ளார். அங்கு பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து, தனது நிலையை கூறுகிறார். இந்த இருவரின் சந்திப்பின் முடிவை, அதிமுக - பாஜக தலைவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதில், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் அமித்ஷாவின் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல்வேறு அணிகளாக உடைந்து கிடக்கிறது. ஆனாலும், அதிமுகவை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என 10 தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் இணைத்து அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கட்சியின் மூத்த உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனாலும், எடப்பாடி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.