புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 20 பேர், தங்களது குடும்பத்தினருடன் அரசு மரியாதைகளைத் தவிர்த்து, சொகுசுப் பேருந்தில் சுற்றுலா சென்ற நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உள்ளிட்ட உச்ச நீதிமன்றத்தின் 20 நீதிபதிகள், தங்கள் குடும்பத்தினருடன் இரண்டு நாள் பயணமாக ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
டெல்லியில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரந்தம்பூருக்கு, வாடகைக்கு எடுக்கப்பட்ட இரண்டு வால்வோ சொகுசுப் பேருந்துகளில் அவர்கள் பயணம் செய்தனர். அரசு சார்பில் வழங்கப்படும் வாகனங்கள், சைரன் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தவிர்த்து, அவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டனர். ராஜஸ்தானின் பின்ஹான் என்ற இடத்தில் தேநீர் அருந்துவதற்காக பேருந்துகள் நிறுத்தப்பட்டன. உச்ச நீதிமன்றத்தின் மீதமுள்ள 14 நீதிபதிகள் இந்தப் பயணத்தில் பங்கேற்கவில்லை.
நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நீதிமன்றத்தின் சம்பிரதாய சூழலுக்கு வெளியே இயல்பாகப் பழகிக்கொள்ளும் வகையில், கடந்த 2005ம் ஆண்டு முதல் இதுபோன்ற பயணங்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய பயணத்தை தலைமை நீதிபதி கவாய் முன்னெடுத்துள்ளார்.