டெல்லி: டெல்லி உச்ச நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுடன் நாய்கள் நல ஆர்வலர்கள் மோதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்றம் உச்சகட்ட பாதுகாப்பு நிறைந்த கட்டிடங்களில் ஒன்று. உச்சநீதிமன்றத்தில் 4 பக்கங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பார்கள். வழக்கறிஞர்கள் தங்களுடைய வாகனங்களை உச்சநீதிமன்றத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி உண்டு. அனால் பொதுமக்களுக்கு ஆரம்ப நுழைவு வாயில் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும், தக்க அனுமதி பெற்றவர்கள் மட்டுமே உச்சநீதிமன்றத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், நாய்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு நாய்களுக்கு இழைக்கப்படும் அநீதி என தெருநாய்களுக்கு உணவு அளிப்போர், நாய்களுக்கு ஆதரவளிப்போர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தியா கேட் பகுதியில் ஊர்வலம் நடத்த முயற்சி செய்து வந்தனர். இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் வாகனங்கள் நிறுத்தப்படும் இடத்திற்கு நுழைந்த பொதுமக்கள், நாய்களுக்கு எதிராக செயல்படுவதாக கூறி வழக்கறிஞர்களிடன் மோதலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மோதலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு தாமாக முன்வந்து அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.