டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்
டெல்லி : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி டெல்லி செங்கோட்டையில் உமர் என்பவன் ஓட்டி வந்த கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றினான். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். தலைநகரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ குழு அமைத்து விசாரித்து வருகிறது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் டாக்டர்கள் போன்ற உயர்நிலையில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
மேலும், இது தொடர்பாக அடுத்தடுத்து டாக்டர்கள் சிக்கி வருகின்றனர்.இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் குறைகேட்பு பக்கத்தில், டெல்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் மறுஅறிவிப்பு வரும் வரை செயல்படாது. ஆனால், மற்ற மெட்ரோ நிலையங்கள் வழக்கம்போல செயல்படும். மேற்கொண்டு தகவல்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்படும்,"எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
