டெல்லி: டெல்லியில் நடந்த சாலை விபத்தில் ஒன்றிய நிதி அமைச்சக அதிகாரி நவ்ஜோத் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். ஒன்றிய நிதி அமைச்சகத்தில் துணைச் செயலாளராக பணியாற்றியவர் நவ்ஜோத் சிங் வயது (52). இவர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில், பங்களா சாஹிப் குருத்வாராவில் இருந்து தனது மனைவியுடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர் டெல்லி கான்ட் மெட்ரோ நிலையம் அருகே ரிங் ரோட்டில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வேகமாக வந்த BMW கார் அவர்கள் மீது மோதியது. சொகுசு கார் மோதியதில் நிதி அமைச்சக அதிகாரி நவ்ஜோத் சிங் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் பலத்த காயமடைந்த நவ்ஜோத் சிங் மனைவி உள்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சாலையில் ஓரமாக ஒரு BMW கார் கிடந்தது , மேலும் சாலைப் பிரிப்பான் அருகே ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது என்று போலீசார் தெரிவித்தனர். விபத்தில் ஈடுபட்ட BMW மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தை குற்றவியல் குழு மற்றும் தடயவியல் அறிவியல் நிபுணர்கள் ஆய்வு சேட்டு வருகின்றனர் . இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்தது. காரை ஓட்டி வந்த பெண் ககன்ப்ரீத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது கணவர் பரிக்ஷித் பயணிகள் இருக்கையில் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.