Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தை தொடந்து செங்கோட்டைக்கு 3 நாள் விடுமுறை!

டெல்லி: டெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை அருகே நேற்றிரவு கார் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால், பாதுகாப்பு மற்றும் விரிவான விசாரணைக்காக செங்கோட்டை 3 நாட்களுக்கு மூடப்படும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

நேற்று மாலை 6.55 மணி அளவில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் நுழைவாயில் அருகே கார் ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியது. அதைத் தொடர்ந்து அருகில் நிறுத்தப்பட்ட பல கார்கள், இருசக்கர வாகனங்கள், ரிக்ஷாக்கள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது. பீதி அடைந்த மக்கள் உயிர் தப்பிக்க அங்குமிங்கும் அலறியடித்து ஓடினர்.

இந்த வெடிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால் பல மீட்டர் தொலைவில் இருந்த வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்தன. அருகில் உள்ள கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின. சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டெல்லி வருமான வரி அலுவலகம் அமைந்துள்ள பகுதியிலும் கூட குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கார் வெடித்த சமயத்தில் அப்பகுதியில் மக்கள் பலர் கூடியிருந்த நிலையில், 11 பேர் உடல் சிதறி பலியாகினர். சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்தன. அங்கு படுகாயமடைந்து கிடந்த 22 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 13 ஆனது. மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உடனடியாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள், மத வழிபாட்டுதளங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து டெல்லி செங்கோட்டை பாதுகாப்பு மற்றும் விரிவான விசாரணைக்காக செங்கோட்டை 3 நாட்களுக்கு மூடப்படும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மேலும் செங்கோட்டை அருகே உள்ள லால் கிலா மெட்ரோ நிலையமும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே டெல்லியில் குண்டு வெடித்த காரை ஓட்டி வந்தவரின் அடையாளம் தெரிந்தது. டெல்லியில் காரை ஓட்டி வந்தது காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் முகமது உமர் நபி, தீவிரவாதி என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹரியானாவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டு கைதான மருத்துவர் ஷக்கீர், உமரின் கூட்டாளி எனக் கூறப்படுகிறது.

சுமார் 3 மணிநேரம் செங்கோட்டை அருகே பார்க்கிங்கில் நின்றிருந்த கார், மாலை 6.48க்கு மெதுவாக இயக்கப்பட்டு சிக்னல் அருகே வந்த பிறகு வெடித்துள்ளது. சந்தேகத்தின் பேரில் முகமது உமர் நபியின் தாய் மற்றும் சகோதரர் காஷ்மீரில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். முகமது உமர் தலைமறைவாக உள்ளார்.

டெல்லியில் கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.