டெல்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருது விழா மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: ஜி.வி.பிரகாஷ், எம்.எஸ். பாஸ்கருக்கு விருதுகள்; ஜனாதிபதி வழங்கினார்
டெல்லி: இந்திய அளவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்-நடிகைகளுக்கு கடந்த 1954ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை உள்பட மற்ற துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டுக்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, நேற்று மாலை 4 மணியளவில் டெல்லி விஞ்ஞான் பவன் அரங்கில் பிரமாண்டமான முறையில் நடந்தது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார்.
71வது தேசிய திரைப்பட விருதுகள் பெறுபவர்கள் குறித்த பட்டியல், கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி அறிவிக்கப்பட்டது. நேற்று நடந்த தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், மலையாள முன்னணி நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனரும், பாடகருமான மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இது இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்று. அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இவ்விருதை வழங்கி கவுரவித்தார். அப்போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி மோகன்லாலுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சிறந்த தமிழ் படம், சிறந்த திரைக்கதை ஆசிரியர், சிறந்த துணை நடிகர் ஆகிய 3 விருதுகள் ‘பார்க்கிங்’ என்ற படத்துக்கு வழங்கப்பட்டது. அப்படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்றார். ‘பார்க்கிங்’ படத்தின் தயாரிப்பாளர் சினிஷ், இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரும் தேசிய விருதுகள் பெற்றனர். வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன் நடித்த ‘வாத்தி’ என்ற படத்துக்காக, சிறந்த இசை அமைப்பாளருக்கான விருதை ஜி.வி.பிரகாஷ் குமார் பெற்றார். மேலும், ‘உள்ளொழுக்கு’ என்ற மலையாள படத்தில் நடித்த ஊர்வசிக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருதும், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற படத்தை இயக்கிய சுதிப்தோ சென்னுக்கு சிறந்த திரைப்பட இயக்குனருக்கான விருதும் வழங்கப்பட்டது.
சிறந்த படமாக ‘12த் ஃபெயில்’, சிறந்த இந்தி படமாக ‘காதல் - எ ஜாக்ஃப்ரூட் மிஸ்ட்ரி’ தேர்வாகி இருந்தது. சிறந்த நடிகருக்கான விருதை ‘ஜவான்’ என்ற இந்தி படத்தில் நடித்த ஷாருக்கான், ‘12த் ஃபெயில்’ என்ற இந்தி படத்தில் நடித்த விக்ராந்த் மாஸ்ஸி ஆகியோர் பகிர்ந்துகொண்டனர். ‘மிஸஸ் சாட்டர்ஜி vs நார்வே’ என்ற இந்தி படத்தில் நடித்த ராணி முகர்ஜி சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.