Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்த நிலையில் டெல்லியில் ஜே.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

சென்னை: எடப்பாடி பழனிசாமியை நேற்று முன்தினம் சேலத்தில் சந்தித்த நிலையில், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. இந்த கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பாஜ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு எடப்பாடி ஒத்துக்கொள்ளவில்லை. அதே நேரத்தில் தொடர்ந்து பாஜ புறக்கணித்ததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓபிஎஸ், டிடிவி.தினகரன் அதிரடியாக அறிவித்தனர். இந்த நிலையில் அவர்களை மீண்டும் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜ இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் டெல்லி சென்ற எடப்பாடியிடம், அமித்ஷா பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு மீண்டும் எடப்பாடி சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றவர்கள் இல்லாததால், 45 தொகுதிகளை நாம் இழக்க நேரிட்டது. எனவே, அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தினார். அப்போது, அவர்களை பாஜவின் என்டிஏ கூட்டணியில் வேண்டுமென்றால் சேர்த்து கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்கு சீட் தருகிறோம். அவர்களுக்கு நீங்கள் சீட்டை கொடுங்கள் என்று எடப்பாடி கூறியதாக தகவல்கள் வெளியானது.

அதே நேரத்தில் எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவது தற்கொலைக்கு சமம் என்று டி.டி.வி.தினகரன் கூறிவிட்டார். அவரை முதல்வர் வேட்பாளர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் எடப்பாடியை, நயினார் நாகேந்திரன் திடீரென சந்தித்து பேசினார்.

அப்போது தற்போது நிலவும் கூட்டணி தொடர்பான விஷயங்கள், பேரவைத் தேர்தல் குறித்தும், பிரிந்து சென்ற நிர்வாகிகளை சேர்ப்பது தொடர்பான ஆலோசனைகளும் நடைபெற்றதாக கூறப்பட்டது.இந்த நிலையில், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்றுள்ள அவர் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நேற்று இரவு சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

பாஜ தலைவர் நட்டாவை சந்தித்த பிறகு நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அக்டோபர் 12ம் தேதி முதல் தமிழ்நாட்டில் மக்கள் சந்திப்பு என்ற சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். அந்த சுற்றுப்பயணம் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று நட்டாவுக்கு அழைப்பு விடுத்தேன். அக்டோபர் 6ம் தேதி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஜே.பி.நட்டா சென்னை வரவுள்ளார். 7ம் தேதி புதுச்சேரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

எனவே அக்டோபர் 12ம் தேதி மதுரையில் இருந்து தொடங்கும் மக்கள் சந்திப்பு பயணத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அது தொடர்பாக முடிவை விரைவில் அறிவிப்பதாக ஜே.பி.நட்டா கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இம்முறை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்றார்.