டெல்லி: டெல்லியில் ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகன் கழுத்தறுத்து கொடூர கொலை செய்யப்பட்டுள்ளனர். மாயமான இளைய மகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தெற்கு டெல்லியின் சத்பாரி கார்க் கிராமத்தை சேர்ந்தவர் பிரேம் சிங் (45). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரஜனி (40). இவர்களுக்கு ரித்திக் (24), சித்தார்த் (22) என்ற மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், பிரேம்சிங், ரஜனி, ரித்திக் ஆகியோர் வீட்டில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 3 பேரின் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இருந்தனர். தலை கல்லால் நசுக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது. இதையடுத்து 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தப்பட்டதில் இளைய மகன் சித்தார்த்தை காணவில்லை. அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கான மருத்துவ சிகிச்சையும் மேற்கொண்டிருந்தார். அவரை காணவில்லை. அவர்தான் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை கண்டுபிடித்தால்தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என்ற முழு விவரம் தெரியவரும். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.