டெல்லி: மும்பையில் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் முதல் ஷோரூம் திறந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் தனது 2வது ஷோரூமை டெல்லியில் வரும் 11ம் தேதி திறக்கிறது. உலகெங்கும் மின்சார வாகனத் துறையில் தலைசிறந்த நிறுவனமாக விளங்கும் டெஸ்லா முதல் ஷோரூமை மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் (BKC) திறந்தது. டெஸ்லா மாடல் Y சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ.59.89 முதல் 67.89 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டது.
அந்த வகையில் இரண்டாவது ஷோரூம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் ஏரோசிட்டி பகுதியில் வரும் 11ம் தேதி திறக்கப்படும் என டெஸ்லா அறிவித்துள்ளது. டெல்லியில் திறக்கப்படும் இந்த ஷோரூம் மூலம், டெஸ்லா தனது மின்சார வாகனங்களுக்கான விற்பனை மற்றும் விநியோகத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மாடல் Y போன்ற கார்கள் இந்த ஷோரூம் மூலம் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.