டெல்லியில் சிறுவர்கள் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கலாம் : ஒன்றிய அரசு வாதம்
டெல்லி : பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. டெல்லியில் தீபஒளி திருநாள் உள்ளிட்ட பண்டிகைகளின்போது பட்டாசு வெடிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும், வெடிக்கவும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்றும் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு தெரிவித்தது. தீபெஒளி, கிறிஸ்துமஸ், குருநானக் ஜெயந்தி ஆகிய பண்டிகைகளின்போது இந்த விதிமுறைகள் பொருந்தும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மெஹ்தா தெரிவித்தார்.
புதிய விதிமுறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். சிறுவர்கள் பண்டிகைகளை கொண்டாடும் விதமாக அனுமதிக்கலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்தது. பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று டெல்லி அரசு தரப்பில் வாதம் செய்யப்பட்டது. பட்டாசு தடை காரணமாக தீபஒளி பண்டிகை நாட்களில் காற்று மாசு குறைந்து காணப்படுகிறது என்றும் எனவே மீண்டும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் எதிர்மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.