டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது; சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் : பிரதமர் மோடி
திம்பு: டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லியின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று செங்கோட்டை. செங்கோட்டையை சுற்றிப் பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இப்பகுதியில் டெல்லி பழைய மார்க்கெட் அமைந்துள்ளது. இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று பிரதமர் செங்கோட்டையில் இருந்து தேசியக் கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். எனவே செங்கோட்டை பகுதியில் எப்போதுமே உயர் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இப்படிப்பட்ட சூழலில், நேற்று மாலை 6.55 மணி அளவில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் நுழைவாயில் அருகே கார் ஒன்று பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், 2 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் புறப்பட்டார். பூடானில் 2 நாள் தங்கியிருக்கும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பூட்டான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி:
திங்கட்கிழமை மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் ஆழமாக பாதித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வலியை நான் புரிந்துகொள்கிறேன். முழு நாடும் அவர்களுடன் நிற்கிறது. சம்பவம் குறித்து விசாரிக்கும் அனைத்து நிறுவனங்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். இந்த சதித்திட்டத்தின் மூலத்தை புலனாய்வு அமைப்புகள் விரைவில் கண்டுபிடிக்கும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இதன் பின்னணியில் உள்ள சதிகாரர்களைத் தப்ப விட மாட்டோம் என்று அவர் உறுதி அளித்தார்.
