டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!!
டெல்லி : டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுப் பிரச்சினை அதிக அளவில் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லியில் காற்று மாசுப் பிரச்சினையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்றத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் காஸ் முகக்கவசத்துடன் வந்தனர்.
இதனிடையே மத்திய அரசே நாடாளுமன்றத்தில் அளித்த அதிர்ச்சித் தகவலில், 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையிலான வெறும் மூன்று வருட காலத்தில், டெல்லியில் உள்ள ஆறு முக்கிய அரசு மருத்துவமனைகளில் மட்டும் 2,00,000க்கும் மேற்பட்ட கடுமையான சுவாச நோய்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் அளித்துள்ளது. அவை நடவடிக்கைகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டு, டெல்லி காற்று மாசு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று சண்டிகர் மக்களவை எம்.பி., மணீஷ் திவாரி, ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.

