Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மனைவி தொடர்ந்த வழக்கு காரணமாக வடசென்னை தாதா நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் இழுபறி: வீடு, மருத்துவமனையில் போலீசார் குவிப்பு

பெரம்பூர்: வடசென்னை தாதா நாகேந்திரன் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக, நாகேந்திரன் வீடு மற்றும் ஸ்டான்லி மருத்துவமனையில் 3வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வடசென்னையை கலக்கிய பிரபல தாதா வியாசர்பாடியை சேர்ந்த நாகேந்திரன் (55) என்பவர், நேற்று முன்தினம் காலை உடல் நலக்குறைவால், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். ஏற்கனவே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பல நாட்களாக நோய்வாய்ப்பட்டு அடிக்கடி தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த நாகேந்திரன் மீது 5 கொலை, 14 கொலை முயற்சி உள்பட 16 வழக்குகள் உள்ளன. இதில், பல வழக்குகள் முடிக்கப்பட்டாலும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் தென்னரசு கொலை வழக்கு என 2 கொலை வழக்குகள் நிறுவையில் உள்ளன.

உயிரிழந்த நாகேந்திரனின் உடல் நேற்று காலை பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், நாகேந்திரனின் மனைவி விசாலாட்சி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவால் இந்த விவகாரத்தில் தற்போது இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று நாகேந்திரனின் இறுதி ஊர்வலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இன்று பிரத பரிசோதனை முடிந்து அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் வியாசர்பாடி நாகேந்திரன் வீடு உள்ள பகுதி ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நாகேந்திரனின் மூத்த மகன் அஸ்வத்தாமன் நேற்று முன்தினம் இரவு ஜாமீன் பெற்று வியாசர்பாடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இதேபோல், வீட்டில் கத்திகளை வைத்து இருந்ததாக, கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நாகேந்திரனின் 2வது மகன் அஜித் ராஜ் என்பவரும் நேற்று முன்தினம் ஜாமீன் பெற்று நேற்று முன்தினம் இரவே வியாசர்பாடிக்கு வந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாகேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்து இன்று மதியம் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டால் இன்று மாலையே முல்லை நகர் சுடுகாட்டில் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.