மேக்கே: இளம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் இளம் இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள 19 வயதுக்கு உட்பட்ட இளம் இந்தியா கிரிக்கெட் அணி, 4 நாள் டெஸ்ட் போட்டிகள் இரண்டில் ஆடியது. முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி வாகை சூடியது. இந்நிலையில், 2வது டெஸ்ட் மேக்கே நகரில், கடந்த 7ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 135 ரன்களும், இந்தியா 171 ரன்களும் எடுத்தன. 2ம் நாளில் 2வது இன்னிங்சை ஆடிய இளம் ஆஸி, மீண்டும் மோசமாக சொதப்பியது. வெறும் 40.1 ஓவர்களை மட்டுமே ஆடிய ஆஸி 116 ரன்னுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் லீ யங் 38 ரன் எடுத்தார்.
இந்திய தரப்பில் நமன் புஷ்பக், ஹெனில் படேல் தலா 3, உதவ் மோகன் 2 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 81 ரன் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர் கேப்டன் ஆயுஷ் மாத்ரே 13 ரன்னிலும், வைபவ் சூர்யவன்ஷி ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். விஹான் மல்ஹோத்ரா 21 ரன்னில் வீழ்ந்தார். பின் இணை சேர்ந்த வேதாந்த் திரிவேதி 33, ராகுல் குமார் 13 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இளம் இந்திய அணி 12.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 84 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது. தவிர, இளம் ஆஸி அணியை, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.