Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பந்துவீச்சு சிறப்பாக இருந்தால் எந்த இலக்கையும் தற்காத்துக் கொள்ளலாம்: கேப்டன் சூர்யகுமார் பேட்டி

துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடர் சூப்பர் 4 சுற்றில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஓபனர் அபிஷேக் சர்மாவின் சரவெடி ஆட்டத்தால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 37 பந்தில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.3 ஓவரில் 127 ரன்களுக்குள் சுருண்டது. அந்த அணியின் சாயிப் ஹாசன் அதிகபட்சமாக 69 ரன்கள் எடுத்தார். இந்தியா பந்துவீச்சில் குல்தீப் 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் வருண் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வங்கதேசத்தை வீழ்த்தியது மூலம் இந்திய அணி ஆசிய கோப்பை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

போட்டிக்கு பின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: இந்த தொடரில் முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு அதிகமாக கிடைக்கவில்லை. அதுவும் சூப்பர் 4 போன்ற முக்கியமான ஆட்டங்களில் முதலில் பேட்டிங் ஆடுவது நல்லதொரு வாய்ப்பு. ஒரு நல்ல ஸ்கோரை அடித்து எதிரணியை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். நேற்றைய நாள் அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. மைதானம் 2வது இன்னிங்ஸில் தோய்வாக மாறியதோடு, பனிப்பொழிவும் ஏற்படாததால் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. வங்கதேச அணியில் இடது கை சுழற்பந்துவீச்சாளர் மற்றும் லெக்ஸ் பின்னர் ஆகியோர் இருந்தனர். எனவே அவர்களை எதிர்கொள்ள சிவம் துபே தான் சரியான நபராக இருப்பார் என்று நினைத்தே அவரை களம் இறக்கினோம்.

ஆனால் எதிர்பார்த்தபடி அந்த திட்டம் பலன் அளிக்கவில்லை. ஆனால் நிச்சயம் நாங்கள் மீண்டும் அதையே செய்வோம். இன்றைய ஆட்டத்தில் பவுண்டரி அருகே மைதானம் சரியாக இல்லை. இதனால் பந்து மெதுவாகதான் பவுண்டரி கோட்டிற்கு சென்றது. அது மட்டும் சரியாக இருந்திருந்தால், நாங்கள் 180 அல்லது 185 ரன்களை இலக்காக நிர்ணயித்திருப்போம். பந்துவீச்சில் 12 முதல் 14 ஓவர் வரை நாம் நல்ல ஓவராக வீசினால் எந்த இலக்கை வேண்டுமானாலும் நம்மால் தற்காத்துக்கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.