இந்தியாவுடன் தொடர் தோல்வி; அதிர்ச்சியா இருக்கு... என்ன ஆடுறீங்க? பாக். வீரர்கள் மீது வாசிம் அக்ரம் சாடல்
துபாய்: 2025ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி மீண்டும் தோல்வியடைந்தது. இதுகுறித்து தனது தீவிர அதிருப்தியையும், வேதனையையும் அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் வெளிப்படுத்தி உள்ளார். அவர் கூறியதாவது:- நான் என் மனதிலிருந்து பேசுகிறேன். பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடுகள் மிகவும் வேதனைப்படுத்துகிறது.
எங்கள் அணியினரின் ஆட்டத்தைப் பார்க்க கஷ்டமாக இருக்கிறது. ஒரு முன்னாள் வீரராக, வெற்றி தோல்வி ஆட்டத்தின் ஒரு பகுதி என்பதை நான் அறிவேன். ஆனால், கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக இந்திய அணி அனைத்துத் துறைகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி வருவதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் ஒன்று அல்லது இரண்டு முறை நாம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் இந்தியாவின் ஆதிக்கம் நம்பமுடியாத அளவிற்கு உள்ளது. அவர்களின் திறமை, அணியின் கூட்டு செயல்பாடுகள் என அனைத்தும் சிறப்பாக உள்ளது.
ஒரு போட்டியில் ஒன்றிரண்டு கேட்ச்களைத் தவறவிடுவது இயல்பு. ஆனால், முதல் 10 ஓவர்களில் 91 ரன்கள் குவித்த பிறகு, நம்மால் 200 ரன்களைக் கூட எட்ட முடியவில்லை என்றால், அதைப் பற்றிப் பேசி எந்த பயனும் இல்லை. குறிப்பாக போட்டியின் மிக முக்கியமான 18 மற்றும் 19-வது ஓவர்களில் பாகிஸ்தான் வீரர்கள் `டாட் பால்’கள் ஆடியதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
மேலும் 19வது ஓவரில் நவாஸ் தனது கவனக்குறைவான ஆட்டத்தால் ரன் அவுட்டானது என்னை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒட்டுமொத்தமாக அணியின் செயல்பாடு ஏமாற்றமளிக்கிறது. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வீரர்களின் மத்திய ஒப்பந்தத்தில் ஒரு புதிய கட்டுப்பாட்டை சேர்க்க வேண்டும். அதன்படி, வீரர்கள் உள்நாட்டு முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் என்பதை விதியாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.