மான நஷ்ட வழக்கில் அதிமுக செய்தி தொடர்பாளருக்கு நஷ்டஈடு தர உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து: உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
சென்னை: தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டு களங்கம் விளைவித்ததாக கூறி யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவருக்கு எதிராக அதிமுக செய்தி தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு யூ டியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, ஜோ மைக்கேல் பிரவீன் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞரின் தவறுக்காக வழக்காடி பாதிக்கப்படக் கூடாது எனக் கூறி 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கை மீண்டும் விசாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.