பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம் கரூரில் உயிரிழந்தவர்களுக்காக 16 நாட்கள் துக்கம் அனுசரித்துக்கொண்டு இருக்கிறோம்: சென்னை திரும்பிய ஆதவ் அர்ஜுனா பேட்டி
சென்னை: தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு சென்றார். அவருடைய வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் 4 நாட்களுக்குப் பிறகு உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த கூடைப்பந்து விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கும் விழாவுக்கு சென்றார். ஆனால் அந்த மாநில முதல்வர் விழாவில் கலந்து கொள்வதாக இருந்ததால், ஆதவ் அர்ஜூனா நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், அவரை கலந்துகொள்ள வேண்டாம் என்று அந்த மாநில அரசு கூறிவிட்டது. இதனால் துவக்க விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா நேற்று இரவு 8 மணி அளவில் டெல்லியில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அப்போது ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கரூரில் உயிரிழந்தவர்களுக்காக, 16 நாட்கள் துக்க நாட்களாக மிகுந்த வலியுடன் இருக்கிறோம். இன்று எங்கள் தலைவரும் சரி, தமிழக வெற்றி கழகமும் சரி, எங்கள் தோழர்களும் சரி, இந்த 16 நாட்கள் எங்கள் குடும்பத்தில், எங்கள் உறவுகள், எங்களுடைய மக்கள், இறந்த 16வது நாள் காரியம் முடியும் வரை யாரும் பேச முடியாத அளவு மிகுந்த வலியோடு இருந்து கொண்டு இருக்கிறோம்.
இதில் எங்களுடைய நியாயங்களை சொல்வதற்கோ, இல்லையேல் எங்கள் மீது உள்ள அவதூறுகளை சொல்லும்போது, அதற்கு பதில் சொல்வதற்கோ முடியவில்லை. எங்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த 41 பேரின் வலிகளோடு கடந்து கொண்டு இருக்கிறோம். 16 நாட்கள் காரியம் முடிந்ததும், என்ன உண்மைகளோ, அந்த உண்மைகளை கண்டிப்பாக நாங்கள் சொல்லுவோம். எங்கள் கட்சியின் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி, எங்கள் நிர்வாகிகளை கைது செய்யக்கூடிய நடவடிக்கைகள் நடக்கின்றன. இந்த இழப்பையும், வலியையும் தாங்கிக் கொண்டு, நாங்கள் அமைதியாக எங்கள் மக்களோடு இருக்கும்போது, எங்கள் கட்சியை முடக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். எங்கள் தலைவர் ஒரு சாமானிய மனிதனாக, நம்பிக்கையுடன், நீதித்துறையை நாடி, உண்மையைக் கொண்டு வருவதற்காக எங்கள் போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
பதினாறு நாட்கள் காரியம் முடிந்ததும், அந்த பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கான பயண திட்டத்தை நாங்கள் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். 16 நாட்கள் முடிந்த பின்பு மற்றதை பேசுவோம். நீங்கள் எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், ஒரு சாமானிய மனிதனாக நாங்கள் காத்துக் கொண்டு இருக்கிறோம். அப்போது உண்மை வெளிவரும். இப்போது எங்கள் தலைவர் சொல்லி இருக்கிறார். கட்சியின் மாவட்ட செயலாளர்களை, கடுமையாக கைது செய்து கொண்டு இருக்கின்றனர். சட்டத்திற்கு அப்பாற்பட்டு நடக்கிறது. அவர்கள் குடும்பத்தினரையும் அவர்களையும் சட்டத்தின்படி வெளியில் கொண்டு வர வேண்டும். அதற்கான பணிகள் நடக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். மிகவும் நன்றி. 16 நாள் காரியம் முடிந்ததும், கண்டிப்பாக எல்லா உண்மைகளையும் உங்களுக்கு சொல்வோம். இவ்வாறு ஆதவ் அர்ஜுனா கூறினார்.