பத்திரப்பதிவு ஐஜி அலுவலகத்திற்குள் புகுந்து ஆவணங்கள் பறிப்பு கூடுதல் ஐஜி சுதா மால்யா முகத்தில் தாலி வீச்சு: முன்னாள் மாவட்ட பதிவாளர் சிவபிரியா மீது போலீஸ் வழக்கு
சென்னை: பத்திரப்பதிவு ஐஜி அலுவலகத்திற்குள் புகுந்து கூடுதல் ஐஜி சுதா மால்யா முகத்தில் தாலியை வீசி எறிந்து, ஆவணங்களை கொள்ளையடித்து சென்ற முன்னாள் மாவட்ட பதிவாளர் சிவபிரியா மீது பட்டினப்பாக்கம் போலீசார் 3 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை, பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் பத்திரப்பதிவு கூடுதல் ஐஜி சுதா மால்யா (58) பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், நான் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கூடுதல் ஐஜியாக பணியாற்றி வருகிறேன். எனது அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் மாவட்ட பதிவாளர் சிவபிரியா என்பவர் நீர்நிலை இடங்களை சட்டத்திற்கு எதிராக தனியாருக்கு பதிவு செய்ததாக துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பின்னர் அவர் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் பணியில் இருந்து நிரந்தரமாக கடந்த 26.6.2023 அன்று நீக்கப்பட்டார். அவர் பணி நீக்கத்திற்கு நான்தான் காரணம் என்று போன் செய்து அடிக்கடி தனிமனித தாக்குதலில் ஈடுபட்டு வந்தார். மேலும் அடிக்கடி எனது அலுவலகத்திற்கு வந்து பத்திரப்பதிவு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை அவதூறாக பேசி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (27ம் தேதி) பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்து, அத்து மீறி எனது அறைக்குள் புகுந்து தகாத வார்த்தையால் பேசி எனக்கு நடக்கிற கெடுதல் அனைத்துக்கும் நீதான் காரணம். எனது தாலியை அறுக்கிறதற்கு தான் நீ உக்காந்திருக்கிற, இந்தா தாலி என அவர் பையில் வைத்திருந்த தாலியை எடுத்து முகத்திற்கு நேராக வீசினார்.
சிவபிரியா தற்போது பணியில் இல்லாததால் நான் அவரை துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது. என் மீது தாக்குதல் நடத்திய போது அவர் மீதான நீதிமன்ற வழக்கு தொடர்பான ஆவணங்களையும் எடுத்து சென்று விட்டார். அதற்கான ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் உள்ளது. எனவே அரசு அலுவலகத்திற்குள் அத்துமீறி உள்ளே புகுந்து அரசு அதிகாரியை பணி செய்ய விடாமால் தடுத்த முன்னாள் மாவட்ட பதிவாளர் சிவபிரியா மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகாரின்படி பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பத்திரப்பதிவு ஐஜி அலுவலகத்தில் பணியாளர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது முன்னாள் மாவட்ட பதிவாளர் சிவபிரியா அலுவலகத்திற்குள் அத்துமீறி உள்ளே புகுந்து கூடுதல் ஐஜி சுதா மால்யா மீது தாலியை வீசி எறிந்தது உறுதியானது. அதைதொடர்ந்து பட்டினப்பாக்கம் போலீசார் சிவபிரியா மீது பிஎன்எஸ் 132, 332(சி), 351(2) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், அவர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

