சேலம்: சேலம் மண்டல பதிவுத்துறையில் உள்ள சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய 5 பதிவு மாவட்டங்களை சேர்ந்த அனைத்து சார் பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்களுக்கான மண்டல அளவிலான சீராய்வுக்கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முடிவில் அமைச்சர் மூர்த்தி கூறுகையில், பத்திர பதிவுத்துறை அலுவலகங்களில் நடைபெறும் பதிவுப்பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்திட கண்காணிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அன்றைய தினமே தொடர்புடையவர்களுக்கு வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.