இடத்தின் மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர் கைது: சுடுகாட்டை விதிமீறி பத்திரப்பதிவு செய்தபோது அதிகாரிகள் காப்பாற்றியதால் தொடர் அத்துமீறல்
சென்னை: இடத்தின் மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்ய ரூ.5 லட்சம் பேரம் பேசி, ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் சார் பதிவாளர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது ஏராளமான புகார்கள் வந்தும் நடவடிக்கை அதிகாரிகள் எடுக்காமல் இருந்ததால் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் சிக்கியுள்ளார்.
தாம்பரம் அடுத்த செம்பாக்கம், மாருதி நகர் பிரதான சாலையில் தாம்பரம் மற்றும் சேலையூர் சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதில், முதல் தளத்தில் சேலையூர் சார் பதிவாளர் அலுவலகமும், இரண்டாவது தளத்தில் தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகமும் இயங்கி வருகிறது. இங்கு சேலையூர், தாம்பரம் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் தினமும் பத்திரப்பதிவிற்காக வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், நிலம் பத்திரப்பதிவு செய்வதற்காக வந்த ஒருவரிடம் நிலத்தின் மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்து தருவதாக கூறி தாம்பரம் சார் பதிவாளர் ரேவதி ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் முதற்கட்டமாக ரூ.2 லட்சம் தரும்படி சார் பதிவாளர் ரேவதி கேட்டார். லஞ்சம் தர விருப்பமில்லாத சம்பந்தப்பட்ட அந்த நபர் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் நேற்று சென்னை சிட்டி 1 லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி இமானுவேல் ஞானசேகரன் தலைமையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து சார் பதிவாளர் ரேவதி ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசார் ரேவதியை கையும், களவுமாக பணத்துடன் கைது செய்தனர். இதில், ரேவதிக்கு உடந்தையாக இருந்த பிரவீன்குமார் என்பவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனையும் நடத்தினர். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்து சென்றனர்.
இந்த அலுவலகத்தில் ரேவதி கடந்த மூன்று ஆண்டுகளாக சார் பதிவாளர் பொறுப்பில் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. நிலத்தின் மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்வதற்கு ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற பெண் சார் பதிவாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் செம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. லஞ்சம் பெறுவதில் அராஜகம் செய்து வந்த ரேவதி: ரேவதி தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2021ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார்.
முதலில் அங்கு அவர் ஹெட் கிளார்க்காகவும், பின்னர் சார் பதிவாளர் இல்லாததால் ரேவதி இன்சார்ஜ் சார் பதிவாளராக இருந்து வந்தார். ரேவதிக்கு அசிஸ்டெண்டாக குணசுந்தரி என்ற பெண் பணியாற்றி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக ரேவதி மற்றும் குணசுந்தரி வைப்பது தான் தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சட்டமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பொதுமக்கள் எந்த பத்திரப்பதிவிற்கு சென்றாலும் அதற்கு ஒரு பெரும் தொகையை நிர்ணயம் செய்து அதனைப் பெற்றுக் கொண்டுதான் இவர்கள் பத்திரப்பதிவு வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சாதாரணமாக செட்டில்மெண்ட் பத்திரப்பதிவு செய்ய சென்றாலும் அதற்கு லஞ்சம் பெறாமல் இவர்களிடம் வேலை நடக்காது என கூறப்படுகிறது. இவர், கடந்த ஆண்டு சுடுகாட்டை பத்திரப்பதிவு செய்து கொடுத்தள்ளார். மேலும் புறம்பாக்கு நிலம், கோயில்நிலங்கள், சுடுகாடு என அரசுக்கு சொந்தமான எந்த நிலமாக இருந்தாலும் பணம் கொடுத்தால் பத்திரப்பதிவு செய்து கொடுத்து விடுவார். அளவுக்கு அதிகமாக இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து லஞ்சம் வாங்குவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது குறித்து பலரிடமிருந்து பத்திரப்பதிவுத்துறைக்கு புகார் சென்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து புகார் வந்ததால் மாவட்ட பதிவாளர் வாரத்திற்கு ஒருமுறை தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வந்து அவ்வப்போது எச்சரிக்கை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் கூட, பத்திரப்பதிவு டிஐஜி ராஜ்குமார், ரேவதியை அழைத்து எச்சரித்துள்ளார். ஆனால், எந்த அதிகாரிகள் என்ன சொன்னாலும் ரேவதி மற்றும் குணசுந்தரி கூட்டணி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து லஞ்சம் பெறுவதை மட்டுமே குறிக்கோளாக செய்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு வேண்டப்பட்டவர்களான டாக்குமெண்ட் ரைடர்களை தரகர்களாக பயன்படுத்தி அவர்கள் மூலம் இருவரும் குறிப்பிடும் தொகையை லஞ்சமாக பெற்றுக் கொண்டுதான் அனைத்து பணிகளையும் செய்து வந்துள்ளனர். இவர்கள் சொல்லும் தொகையை லஞ்சமாக கொடுத்தால் மட்டுமே பத்திரபதிவு உடனடியாக செய்து தரப்படும். இல்லையென்றால் இழுத்தடித்து தான் பத்திர பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது. ரேவதி சொல்லும் தொகையை நிர்ணயம் செய்து குணசுந்தரி சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி பணம் பெற்று வந்துள்ளனர்.
தொடர்ந்து இவர்களது அட்டூழியம் தாம்பரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகரித்து வந்துள்ளது. கடந்த வாரம் வயதான முதியவர் ஒருவர் தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை தனது மகன் பெயருக்கு செட்டில்மெண்ட் செய்வதற்காக வந்துள்ளார். அப்போது செட்டில்மென்ட் செய்ய வேண்டும் என்றால் டாக்குமெண்ட் இல்லாமல் தனியாக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என ரேவதி மற்றும் குணசுந்தரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர் செட்டில்மெண்ட் டாக்குமெண்ட் பதிவு செய்யாமல் சென்றுவிட்டார். இதுபோல பலரிடம் ரேவதி மற்றும் குணசுந்தரி ஆகியோர் லஞ்ச பணத்தை அதிகளவில் கேட்டதால் பெரும்பாலானோர் பிறகு செய்து கொள்ளலாம், பணம் வந்தவுடன் பத்திர பதிவு செய்து கொள்ளலாம் என திரும்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுபோல், தொடர்ந்து பணம் கொடுத்தால் மட்டுமே பத்திர பதிவு என செயல்பட்டு வந்த ரேவதி, குணசுந்தரி கூட்டணிக்கு முடிவு வராதா என சார்பதிவாளர் அலுவலகத்தில் பலர் காத்து கிடந்தனர். மேல்மட்டத்தில் எங்களுக்கு ஆட்கள் உள்ளனர் என கூறி தொடர்ந்து ரேவதி அட்டூழியம் செய்து வந்தார்.
இது குறித்து பத்திரப்பதிவுத்துறை ஐஜி அலுவலகத்தில் எவ்வளவு புகார்கள் செய்தாலும், ரேவதி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதற்காக ஐஜி அலுவலக உயர் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரேவதி தனியாக கவனித்து வந்துள்ளார். இதனால் பொதுமக்களின் புகார்கள் ஐஜி அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பதிவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று ரேவதியின் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
