Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கன்னியாகுமரியில் கடலில் தூண்டில் வளைவு பகுதியில் அலங்கார நடைப்பாதை அமைக்கப்படுமா?.. சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி கடலில் தூண்டில் வளைவு பகுதியில் அலங்கார நடைப்பாதை அமைக்கப்படுமா? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். கன்னியாகுமரியில் படகுதுறைக்கு அருகே கடலில் கற்களை கொண்டு நிரப்பி சுமார் 300 மீட்டர் நீளத்துக்கு தூண்டில் வளைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று 500 மீட்டர் அளவிற்கு தூண்டில் வளைவு அமைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் தற்போது உள்ள தூண்டில் வளைவு தடுப்பு சுவரில் சுற்றுலா பயணிகள் எந்தஒரு பாதுகாப்பும் இன்றி பாறாங்கற்கள் மீது நடந்து சென்று கடலின் இயற்கை அழகை ரசிக்கின்றனர். இது ஆபத்தானதாக இருந்தாலும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் கடல் காற்றை அனுபவிக்கவும், தூண்டில் வளைவுக்காக கற்கள் போடப்பட்டுள்ள தடுப்பு சுவர் பகுதியில் நடந்து சென்று கடல் அழகை ரசிக்கும் வகையிலும் சுமார் 6 அடி முதல் 10 அடி அகலத்துடன் கடலில் அலங்கார நடைப்பாதை அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மீன்வளத்துறை தூண்டில் வளைவு திட்டத்துடன் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், தூண்டில் வளைவு அலங்கார நடைப்பாதையில் ஆங்காங்கே கான்கிரீட்டால் ஆன இருக்கைகள் அமைத்தால் அங்கு அமர்ந்து இயற்கையை ரசிக்க முடியும்.

தூண்டில் வளைவு நடைப்பாதையில் கடைசியில் பெரிய அளவில் வட்ட வடிவில் நான்கு புறமும் இருக்கைகள் அமைத்து கான்கிரீட்டால் ஆன பெரிய காட்சி கோபுரம் அமைக்கலாம். இவ்வாறு அமைந்தால் காட்சி கோபுரத்தின் மேல் ஏறி கடலின் இயற்கையை ரசிக்க முடியும். இந்த அலங்கார நடைப்பாதையில் கண்காணிப்பு கேமரா, கடைசி பகுதியில் உயர் மின்விளக்கு கோபுரம், ஆரம்பம் முதல் கடைசி வரை அலங்கார எல்இடி கலர் விளக்குகள் மற்றும் ஒரு சில பகுதிகளில் மூங்கிலால் ஆன குடைகள் அமைத்தால் அலங்கார நடைப்பாதை பிரபல சுற்றுலா பகுதியாக மாறும் என்றனர்.