ரூ.2 கோடி கடன் தொல்லையால் தலைமறைவான தீப்பெட்டி ஆலை தொழிலாளி அக்கா, தங்கையுடன் தற்கொலை: பொள்ளாச்சியில் பரிதாபம்
பொள்ளாச்சி: கோவில்பட்டி தீப்பட்டி ஆலையில் பணியாற்றிய போது சக ஊழியர்களிடம் ரூ.2 கோடி வரை கடன் பெற்று பைனான்ஸ் தொழில் செய்து வந்த தொழிலாளி, கடன் தொல்லை காரணமாக அக்காள், தங்கையுடன் பொள்ளாச்சியில் பொட்டாசியம் குளோரைடு குடித்து தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடலையூர் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (35). இவரது மனைவி கண்மணி. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முத்துக்கிருஷ்ணனின் அக்காள் முத்துலெட்சுமி (46). இவரது கணவர் கருப்புசாமி (46). இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். முத்துகிருஷ்ணனின் தங்கை மீனாட்சி (36). இவரது கணவர் மாரிமுத்து ஈஸ்வரன் (46). இத்தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சகோதரிகளுடன் முத்துகிருஷ்ணன் கோவில்பட்டியில் உள்ள தீப்பட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு சக தொழிலாளர்களிடம் இருந்து குறைந்த வட்டிக்கு ரூ.2 கோடி வரை கடன் பெற்று அதனை கூடுதல் வட்டிக்கு விட்டு பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் இவர்களிடம் கடன் பெற்றவர்கள் மீண்டும் பணத்தை திரும்ப தரவில்லை எனக் கூறப்படுகிறது. நாட்கள் செல்ல செல்ல இவர்களுக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், 3 பேரும் குடும்பத்துடன் தலைமறைவாக சிறிது காலம் வேறு ஏதாவது தொழில் செய்து கடனை திரும்ப செலுத்தி விடலாம் என எண்ணினர்.
இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஊரை காலி செய்து விட்டு 3 குடும்பத்தினரும் திருப்பூர் தாராபுரம் வந்தனர். அங்கு சரிவர தொழில் எதுவும் அமையாததால், கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு வந்தனர். பொள்ளாச்சி பிகேஎஸ் காலனியில் உள்ள காம்பவுண்ட் வீடு ஒன்றில் வாடகைக்கு குடியேறினர். நகர் பகுதியில் எங்காவது ஓட்டல் ஒன்றை துவங்க திட்டமிட்டு இடம் தேடி அலைந்தனர். கடந்த 25ம் தேதி கண்மணி தனது குழந்தைகளுடன் கடைக்கு சென்றிருந்தார். இதே போல, ஓட்டலுக்கு இடம் தேடி கருப்பசாமி, மாரிமுத்து, ஈஸ்வரன் ஆகியோரும் வெளியே சென்றிருந்தனர்.
வீட்டில் இருந்த முத்துகிருஷ்ணன் தனது சகோதரிகளான முத்துலட்சுமி, மீனாட்சி ஆகியோரிடம் கடன்காரர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். நாம் உயிரோடு இருந்தால், குடும்பத்தினருக்கு தான் ஆபத்து. நம்மை தேடி கடன்காரர்கள் வரும் முன்பாக நாம் மூவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். அதன்படி தீக்குச்சி தயாரிக்க பயன்படுத்தும் பொட்டாசியம் குளோரைடு என்ற திரவத்தை மூவரும் குடித்தனர். இவர்களின் முனகல் சத்தம் கேட்ட, அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி மூவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.