Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடன் தொல்லையால் விபரீதம்; 3 மகள்களின் கழுத்தை வெட்டிக் கொன்று தந்தை தற்கொலை: நாமக்கல் அருகே பயங்கரம்

நாமக்கல்: நாமகிரிப்பேட்டை அடுத்த மங்களபுரத்தில், கடன் தொல்லையால் 3 மகள்களை கழுத்தை வெட்டி கொலை செய்துவிட்டு தந்தையும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்த மங்களபுரம் அருகேயுள்ள வேப்பங்கவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(35). இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ‘ரிக்’ வண்டிகளை வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் தனியார் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் நாமகிரிப்பேட்டை ஒன்றிய பொருளாளராகவும் இருந்தார். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு பிரக்திஷா ஸ்ரீ(10), ரித்திகா ஸ்ரீ(7), தேவா ஸ்ரீ(6), அனிஸ்வரன்(1) என நான்கு குழந்தைகள். இந்த நிலையில் வழக்கம் போல், நேற்று இரவு கோவிந்தராஜ், தனது குடும்பத்தினருடன் உணவு சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, பாரதி, தனது ஒரு வயதுடைய இளைய மகன் அனிஸ்வரனுடன், உறங்குவதற்காக படுக்கையறைக்கு சென்றார். வீட்டில் உள்ள ஹாலில் கோவிந்தராஜ், அவரது 3 பெண் குழந்தைகளுடன் தூங்கினார். இந்தநிலையில் திடீரென்று இன்று அதிகாலை 3 மணியளவில் தூக்கத்தில் இருந்து எழுந்த கோவிந்தராஜ், மனைவி பாரதி, தூங்கிக் கொண்டிருந்த அறையை வெளிபக்கமாக சாவியை வைத்து பூட்டியுள்ளார். பிறகு, தன்னுடன் ஹாலில் தூங்கிக் கொண்டிருந்த தனது 3 பெண் குழந்தைகளின்கழுத்தையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தூக்கத்தில் இருந்த குழந்தைகள் அலறி துடித்தனர். அப்போது அவர்களின் சத்தம் கேட்டு எழுந்த பாரதி அறையின் கதவை திறக்க முயன்றபோது அது வெளிபக்கமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அறையினுள் இருந்தபடி சத்தம் போட்டுள்ளார்.

பின்னர் தனது அறையில் இருந்த மற்றொரு சாவியை எடுத்து அறையை திறந்துகொண்டு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கு ரத்த வெள்ளத்தில் 3 குழந்தைகளும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்களின் அருகே கோவிந்தராஜூம் வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து பாரதி கதறி துடித்துள்ளார். பின்னர் அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி மங்களபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். கோவிந்தராஜ் மற்றும் 3 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு போலீசார் விசாரித்தனர். அதில் கோவிந்தராஜ் 3 குழந்தைகளின் கழுத்தையும் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு பின்னர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரிந்தது.

இதையடுத்து அவர்களது நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசாரின் முதற் கட்ட விசாரணையில், ‘கோவிந்தராஜ் தனது தொழில் மற்றும் வீட்டு கடன் காரணமாக 20 லட்சம் ரூபாய்க்கு மேல் வெளியில் கடன் வாங்கியுள்ளார். கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாததால், பல நாட்களாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அதனால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா, ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர் நேரடியாக வந்து விசாரணை நடத்தினர். மேலும் கோவிந்தராஜ் கடன் வாங்கிய விவரங்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தந்தையே தான் பெற்ற குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.