கடன் பிரச்னையில் சிக்கியதால் திருத்தணி தனியார் விடுதியில் சென்னை நபர் தற்கொலை: மாத்திரைகள், கடிதம் சிக்கியது
திருத்தணி: சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் விஜயன் (42). இவர் தனியார் நிறுவன ஊழியர். கடந்த 2 நாட்களுக்கு முன் திருத்தணி பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் விஜயன் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில், இன்றுகாலை விஜயன் தங்கியிருந்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வந்ததால் விடுதி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு பின்னர் விடுதி நிர்வாகிகள், மாற்று சாவி மூலம் விஜயன் தங்கியிருந்த அறையைத் திறந்து பார்த்தபோது படுக்கையில் விஜயன் சுயநினைவற்று கிடந்துள்ளார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்தபோது விஜயன் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது.
இதனிடையே போலீசார் வந்து விஜயனின் அறையில் சோதனை நடத்தியபோது படுக்கையில் ஏராளமான மாத்திரைகள் இருந்தது. மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ‘’கடன் தொல்லையால் எனது வாழ்க்கை சிதைந்துவிட்டது. இதன்காரணமாக மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்கிறேன். தன்னை குடும்பத்தினர் மன்னித்து விடவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுசம்பந்தமாக திருத்தணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.


