பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல்: பஸ், ரயில், விமான சேவைகள் முடங்கியது: 2 போர்க்கப்பல்களை அனுப்பியது இந்தியா
கொழும்பு: இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்து விட்டது. இலங்கையில் கடந்த வாரம் முதலே கனமழை பெய்து வந்த நிலையில், இந்தியாவை நோக்கி நகரும் ‘டிட்வா’ புயலின் தாக்கத்தால் பெருமழை கொட்டி வருகிறது. இதனால் திரும்பிய திசை எல்லாம் இலங்கை முழுவதும் வெள்ளக்காடாக மாறி உள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கி உள்ளது.
தற்போது டிட்வா சூறாவளி புயல் இலங்கையின் கிழக்கு மாவட்டமான திருகோணமலைக்கு தெற்கே சுமார் 50 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. அந்த புயல் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் இலங்கையில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. பல மாகாணங்களில் 200 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. கிழக்கு திருகோணமலை, பதுளை மற்றும் தெற்கு மாகாணத்தில் மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் 150 மி.மீ வரை மழை பெய்துள்ளது.
80 முதல் 90 கிமீ வரை காற்று வீசுவதால் இலங்கைக்கு வரும் விமானங்கள் இந்தியாவின் கொச்சி மற்றும் திருவனந்தபுரம் மற்றும் தெற்கு மாகாணத்தில் மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மத்திய மாகாண நகரமான கம்போலாவில், ரயில் நிலையம் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளது, பல பெட்டிகள் நீரில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிட்வா புயலால் மலையகப் பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்கள் வெள்ளக்காடாக மாறியதுடன், தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுப் பெரும் சேதத்தை விளைவித்துள்ளன. சாலை மற்றும் ரயில் போக்குவரத்துத் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
21 பேரைக் காணவில்லை. சுமார் 600 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, 44,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், நிலைமையைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியமற்ற அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு நேற்று பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 20,500 ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இலங்கையின் வெள்ள மீட்புப் பணிகளில் இந்திய விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஈடுபடுத்தப்படும் என்று ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இலங்கைக்கு நிவாரண உதவிகள் வழங்க வசதியாக ஆபரேஷன் சாகர் பந்து தொடங்கப்பட்டதாக ஒன்றிய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அறிவித்தார். இதற்காக ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகியவை கொழும்பில் நிவாரணப் பொருட்களை ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
* பிரதமர் மோடி இரங்கல்
இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்டு பலியான மக்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்,’ டிட்வா புயலால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன். எங்கள் நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இந்தியாவுடன் ஒற்றுமையுடன், ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைத்துள்ளோம். நிலைமை சீரடையும்போது மேலும் உதவி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

