Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குஜராத் பாலம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு: மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்

வதோதரா: குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் விதமாக மஹிசாகர் ஆற்றின் குறுக்கே உள்ள கம்பீரா பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், ஒரு ஆட்டோ ரிக்ஷா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை ஆற்றுக்குள் விழுந்தன. இந்த விபத்தில் ஏற்கனவே 10 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது. ஆற்றில் இருந்து மேலும்7 சடலங்கள் நேற்று மீட்கப்பட்டதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. சம்பவ இடத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆற்றின் கீழ்ப்பகுதியின் 4 கிலோ மீட்டர் வரை சென்று மாயமான 3 பேரை தேடி வருகின்றனர். மழை காரணமாகவும், ஆற்றில் அதிகளவில் சேறு இருப்பதாலும் தேடுதல், மீட்பு பணிகள் சவாலாக உள்ளது.

* 3 ஆண்டுக்கு முன்பே எச்சரித்த சமூக ஆர்வலர்

யுவசேனா என்ற சமூக அமைப்பை நடத்தும் லக்கன் தர்பார் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் மாநில சாலைகள் மற்றும் கட்டிடங்கள் துறை அதிகாரியிடம் பேசும்போது, “ஐயா கம்பீரா பாலம் ஆபத்தான நிலையில் உள்ளது. அதை சரி செய்ய வேண்டும் அல்லது புதிய பாலம் கட்டி தர வேண்டும்” என கூறி உள்ளார். அதற்கு அரசு அதிகாரி ஒருவர், “ தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் அந்த பாலம் நீண்ட நாள்கள் தாங்காது என்பது தெரிய வந்தது. ஆனால் பாலத்தை மூட முடியாது. இதுபற்றி மேலதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்” என பதிலளித்துள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

* 4 இன்ஜினியர்கள் சஸ்பெண்ட்

வதோதரா ஆற்றில் பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மாநில சாலைகள் மற்றும் கட்டிடத் துறையைச் சேர்ந்த நான்கு பொறியாளர்களை சஸ்பெண்ட் செய்து முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார்.

* கடந்த 4 ஆண்டில் இடிந்து விழுந்த 16 பாலங்கள்

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிக்னேஷ் மேவானி செய்தியாளர்களிடம் கூறுகையில், “குஜராத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 16 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. ஆனால், இது தொடர்பாக ஒருவரை கூட போலீசார் கைது செய்யவில்லை. இந்த 16 பால விபத்துகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்’’ என்றார்.