புதுடெல்லி: மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள செவிலியர் வழக்கில் தீர்வு காண இந்தியா முயற்சி செய்து வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தொழில் பங்குதாரரை கொன்றதாக கேரள நர்ஸ் நிமிஷா ப்ரியாவுக்கு ஏமனின் சனா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன்படி நிமிஷா ப்ரியாவுக்கு கடந்த 16ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட இருந்தது. நிமிஷா ப்ரியாவை காப்பாற்ற கோரி உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய் யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்தியாவின் கிரான்ட் முப்தி என அழைக்கப்படும் கேரள மாநிலம் காந்தரபுரம் ஷேக் அபுபக்கர் முஸ்லியார் என்பவர் ஏமனில் உள்ள மதத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கடைசி நிமிடத்தில் நிமிஷா ப்ரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நிமிஷா ப்ரியா விவகாரம் தொடர்பாக ஏமனில் உள்ள அதிகாரிகளுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “இதுஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். இந்த விவகாரத்தில் இந்தியா சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.
நிமிஷா ப்ரியா குடும்பத்துக்கு உதவ ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளோம். மேலும் ஏமனில் உள்ள அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என தெரிவித்தார்.