Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் எடப்பாடிக்கு செங்கோட்டையன் விதித்த கெடு இன்று முடிகிறது: அதிமுக பொதுக்கூட்ட அழைப்பிதழில் பெயர் இல்லை

கோபி: கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடந்த 5ம் தேதி, செய்தியாளர் சந்திப்பின் போது, அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்றும் அதற்காக 10 நாட்கள் கால அவகாசம் அளிப்பதாகவும், அதற்குள் எடப்பாடி ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தன்னுடன் தொடர்பில் உள்ள ஒத்த கருத்துடைய பல முன்னாள் அமைச்சர்கள், பிரிந்து சென்றவர்களை வைத்து ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கெடு விதித்த மறுநாளே, செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளை பறித்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனின் ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி.சத்தியபாமா, ஒன்றிய செயலாளர்கள் தம்பி (எ) சுப்ரமணியம், குறிஞ்சிநாதன், ஈஸ்வரமூர்த்தி, அத்தாணி பேரூர் கழக செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட 10 பேரின் பதவிகளை பறித்தார். மேலும், அத்தாணி பேரூர் கழக துணைச்செயலாளர் வேலு என்கிற மருதமுத்து உள்ளிட்ட இருவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விடுவித்தார்.

அதைத்தொடர்ந்து செங்கோட்டையனுக்கு ஆதரவாக கோபி தொகுதியில் இருந்த சுமார் 2,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சி பதவிகளை ராஜினாமா செய்து எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுத்தனர். அதைத்தொடர்ந்து டெல்லி சென்ற செங்கோட்டையன் அங்கு அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழக அரசியல் களத்தில் அதிமுக நிலை குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செங்கோட்டையனின் குரலுக்கு ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அணியினர் வரவேற்பு கெடுத்ததுடன், நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டு, குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டிற்கு சென்று அவருக்கு வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு விதித்த கெடு (15ம் தேதி) இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சென்னை சென்ற செங்கோட்டையன் சென்னையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று அண்ணா பிறந்தநாள் விழா நிகழ்வில் செங்கோட்டையன் கலந்து கொள்கிறார். அப்போது மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து அதிரடி நடவடிக்கைகள் குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இன்று அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையத்தில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ள ஏ.கே.செல்வராஜ், செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், தலைமை கழக பேச்சாளர் ஜலேந்திரன், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளதாக நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பெயர் இடம் பெறவில்லை. அவர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு நடக்கும் பொதுக்கூட்டம் என்ற நிலையில்,அந்த அழைப்பிதழில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் ரமணிதரன், ஏ.டி.சரஸ்வதி, ஈஸ்வரன், இஎம்ஆர் ராஜா, முன்னாள் எம்.பி. காளியப்பன் என பலரது பெயர்கள் இடம்பெற்று உள்ள நிலையில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.